மணிப்பூர் மாநிலத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய சிலர் இந்த குற்ற செயலை அரங்கேற்றியுள்ளனர். அதையடுத்து ஊரடங்கு அமல் செய்துள்ளது அம்மாநில அரசு.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த மோசமான சம்பவங்களை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள். அந்தளவுக்கு அங்கே இன கலவரம் மோசமாக இருந்தது. உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுக் குட்டு வைத்தது. அதன் பிறகும் கூட மோதல் முழுமையாக முடிவுக்கு வர சில காலம் ஆனது. அதன் பின்னரே அங்கே மெல்ல அமைதியான சூழல் திரும்பி வந்தது. இதற்கிடையே புத்தாண்டு தினத்தில் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை அரங்கேறியுள்ளது. இந்த வன்முறையில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.. மேலும், பலர் காயமடைந்தனர், அதைத் தொடர்ந்து மணிப்பூர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று மிரட்டி பணம் பறிப்பதற்காக ஆயுதங்களுடன் வந்ததாக தௌபல் மாவட்டத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் கூறினர். அப்போது அவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த பிறகு, ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் ஆயுதம் ஏந்தி வந்து ரகளையில் ஈடுபட்டவர்களின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், “துப்பாக்கியுடன் இங்கு அந்த குழு வந்தது. அவர்களுக்குத் தெரிந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென சண்டை மூண்டது. திடீரென ஏதேதோ நடக்கச் சண்டை ஏற்பட்டு, கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினர்” என்றார். இந்தச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் மெல்ல அமைதி திரும்பி வந்த நிலையில், திடீரென நடந்த இந்த அரங்கேறிய இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்த அவர், அமைதி காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அந்த வீடியோவில் பிரேன் சிங், “அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு நான் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அரசுக்கு உதவுமாறு லிலாங்கில் (சம்பவம் நடந்த இடம்) உள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
இதையடுத்து இரவில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் உடன் அவசர கூட்டத்தையும் முதல்வர் பிரேன் சிங் நடத்தினார். இந்த வன்முறையைத் தொடர்ந்து தௌபால், இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு, கக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.