மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜவாஹிருல்லா!

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தமிழ்நாடு மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும் நிரந்தர நிவாரணத் தொகையாக 12659 கோடி ரூபாயும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக அளவிடப்படவில்லை. அதனை சரி செய்யும் வகையில் நிவாரண நிதியாக 2000 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் தமிழ்நாட்டு முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். ஒன்றிய அரசின் நிதியை பெறும் வரை நிவாரணப் பணிகளை நிறுத்தி வைக்க முடியாது என்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 6000 குடும்ப அட்டை அடிப்படையில் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 1486 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கி இருக்கிறது. இதன் காரணமாக 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும்.

புயலால் சேதம் அடைந்த சாலைகள் பாலங்கள் கட்டிடங்கள் மின் உபகரணங்கள் குடிநீர் தொட்டிகள் போன்ற அடிப்படைத் தேவைகளை சீர் செய்வதற்கு இன்னும் அதிக நிதி தேவைப்படும். இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு வழங்கும் 6000 ரூபாயை பிரதமர் மோடி வழங்கிய பணம் என்று உண்மைக்கு முரணான பரப்புரையை பாஜகவினர் செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு தனது கருவூலத்திலிருந்து எடுத்து வழங்கி இருக்கும் பணத்தை ஒன்றிய அரசு வழங்கியிருப்பதாக பரப்புரை செய்வது மிகப் பெரிய மோசடி. மிக்ஜாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பேரிடர் கால சிறப்பு நிதியிலிருந்து இரண்டு தவணைகளாக ரூபாய் 900 கோடி ஒன்றிய அரசு தந்திருக்கிறது. இது ஏற்கனவே ஒதுக்கி வைக்கப்பட்ட நிதி தானே தவிர டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தரப்பட்டவை அல்ல. 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிற்கு இயற்கை பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கவும் சீரமைக்கவும் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்ட தொகை ரூபாய் 1,27,655.80 கோடி ஆகும். ஆனால் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டது ரூபாய் 5,884.49 கோடி மட்டுமே. தமிழ்நாடு அரசு கேட்ட தொகையில் 4.62 விழுக்காடு மட்டுமே ஒன்றிய அரசு இதுவரை தந்துள்ளது.

இந்த நிலையில் இன்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமரிடம் மேடையிலேயே நேரடியாக தமிழ்நாட்டின் சூழ்நிலையை எடுத்துரைத்து முதல்வர் அவர்கள் இயற்கை பேரிடர் என அறிவித்து நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த பிரதமர் தமிழ்நாட்டுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு நிதி அளித்து இருப்பதாகவும் தமிழ்நாட்டுக்கு இரண்டரை மடங்கு அதிகம் நிதி வழங்கியுள்ளோம் என்றும் பேசியிருக்கிறார். 2014-க்கு முந்தைய 10 ஆண்டுகளில் தந்த நிதியை விட தற்போது இரண்டரை மடங்கு அதிகம் நிதி வழங்கியிருப்பதாகவும் பிரதமர் பேசி இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு அளித்துள்ளது என்று அறிவித்த பிரதமர் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியுள்ள தொகை என்னவென்பதை குறிப்பிட்டு சொல்ல மறுக்கிறார். இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் வழங்கப்பட்ட தொகையை ஏதோ தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது போல மாயத் தோற்றத்தை பிரதமர் உருவாக்குகிறார். தமிழ்நாட்டில் இருந்து பெறப்படும் வரி வருவாயை அதிகமாக பெற்றுக் கொண்டு மக்கள் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க மறுப்பது மாபெரும் அநீதி. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.