போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்கக் கூட தயங்குவது வேதனை அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

“போக்குவரத்துப் பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர்களும் பயனடையும் வண்ணம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்” என்று தி.மு.க. தேர்தல் அறிக்கை எண் 152-ல் கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை பரிசீலிக்கக் கூட தயங்குவது வேதனை அளிக்கிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியப் பயன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதனை ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டிய தி.மு.க. அரசு, தொழிற்சங்க நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வண்ணம் சில வாய்மொழி உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. தி.மு.க. அரசின் இந்த தொழிலாளர் விரோதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு மாதங்களில் அவற்றிற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.