திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, விஜயகாந்த்துக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இன்று திருச்சி வந்தடைந்த பிரதமர் மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழக 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 500 படுக்கைகள் கொண்ட மாணவர் விடுதியை மாணவர்களுக்கு அர்ப்பணித்தார். மேலும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்தார். இந்திய எரிவாயு ஆணையத்தால் நிறைவேற்றப்படும் கொச்சி-கூத்தநாடு-பெங்களூர்-மங்களூர் எரிவாயுக் குழாய் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கிருஷ்ணகிரி முதல் கோயம்புத்தூர் வரை 323 கிலோ மீட்டர் இயற்கை எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டங்களுக்கும், சென்னை வல்லூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தரைவழி முனையத்திற்கான பொது வழித்தடத்தில் பிஓஎல் குழாய்கள் அமைத்தல் பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
மேலும், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இது உலகிலேயே தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. முற்றிலும் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு வேகமான உலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கார்பைடு மற்றும் ஆக்சைடு எரிபொருட்கள் இரண்டையும் மறுசுழற்சி செய்யும் திறன் கொண்டது. மேலும், சேலம் – மேக்னசைட் சந்திப்பு – ஓமலூர் – மேட்டூர் அணை இரட்டை ரயில்பாதைத் திட்டம், மதுரை – தூத்துக்குடி இரட்டை ரயில் பாதைத்திட்டம், திருச்சிராப்பள்ளி – மானாமதுரை – விருதுநகர் ரயில் பாதை மின்மயமாக்கல், விருதுநகர் – தென்காசி மின்மயமாக்கல், செங்கோட்டை – தென்காசி – திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்பாதை மின்மயமாக்கல் திட்டப்பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
திருச்சி – கல்லகம் பிரிவில் நான்கு வழிச்சாலை, கல்லகம் – மீன்சுருட்டி 4/2 வழிச்சாலை, செட்டிகுளம் – நத்தம் நான்கு வழிச்சாலை, காரைக்குடி – ராமநாதபுரம் இருவழிச் சாலை, சேலம் – திருப்பத்தூர் – வாணியம்பாடி நான்கு வழிச்சாலை ஐந்து சாலைத் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இப்படியாக தமிழ்நாட்டில் ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, எனது தமிழ் குடும்பமே! என உச்சரித்துவிட்டு இந்தியில் தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது:-
எனது தமிழ் குடும்பமே உஞ்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2024-ம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது. இன்று தமிழ்நாடு முன்னேற்றத்துக்கு ரூ20,000 கோடி திட்டங்கள் தொடக்கங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பலருக்கும் 2023ம் ஆண்டின் கடைசி சில வாரங்கள் கடினமானவையாக இருந்தன. கனமழை காரணமாக சிலரை நாம் இழந்திருந்தோம். சொத்துக்களும் கணிசமான அளவில் சேதமடைந்தன. இவ்வளவு நெருக்கடிகளை எதிர்கொண்ட குடும்பங்களின் நிலை எனக்குள் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியான சூழலில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு துணையாக நிற்கிறது. இந்த பாதிப்பிலிருந்து மக்கள் மீள அனைத்து ஆதரவையும் மாநில அரசுக்கு நாங்கள் அளித்து வருகிறோம்.
சில நாட்களுக்கு முன்பாக விஜயகாந்த்தை இழந்திருக்கிறோம். அவர் சினிமா உலகில் மட்டுமல்ல, அரசியல் வாழ்க்கையிலும் அவர் கேப்டனாக இருந்திருக்கிறார். அவர் மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார். ஒரு அரசியல்வாதி என்கிற நிலையில், அனைத்திற்கும் மேலாக அவர் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து வந்திருக்கிறார். அவருக்கு நான் எனது அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றேன். இன்று தமிழகத்தின் மேலும் ஒரு மைந்தனான எம்.எஸ்.சுவாமிநாதனையும் நான் நினைவு கூர்கிறேன். அவர் நமது நாட்டின் உணவு பாதுகாப்புக்காக முக்கியமான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். கடந்த ஆண்டில் அவரையும் நாம் இழந்திருக்கிறோம்.
தமிழகத்திற்கு வரும்போது ஒரு புதிய சக்தி கிடைக்கிறது. மத்திய அரசு வரலாறு காணாத நிதியை தமிழ்நாட்டுக்கு செலவு செய்கிறது. 2014 ஆம் ஆண்டுக்கு முன் மாநிலங்களுக்கு ரூ.30 லட்சம் கோடி தான் அளித்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ. 120 லட்சம் கோடியை தமிழகத்திற்கு அளித்து இருக்கிறோம். இது இதற்கு முந்தைய 10 ஆண்டுகளை விட இரண்டரை மடங்கிற்கும் அதிகம் ஆகும். தமிழக தேசிய நெடுஞ்சாலைகளுக்கு 3 மடங்கு அதிக நிதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழக ரயில்வே துறைக்கு மட்டும் முன்பை விட இரண்டரை மடங்கு அதிகம் அளித்துள்ளோம். இதேபோன்று தமிழக மக்களுக்கு மத்திய அரசின் இலவச ரேஷன் பொருட்கள், மருத்துவ வசதி என அனைத்தும் கிடைக்கிறது. தமிழக மக்களுக்கு வீடுகள், கழிப்பறைகள், குடிநீர்- எரிவாயு இணைப்புகளையும் மத்திய அரசு கொடுத்து வருகிறது. 10 ஆண்டுகளில் நவீன கட்டமைப்புகளில் மிகப் பெரிய முதலீடு. உலகின் 5வது பொருளாதார சக்தியாக இந்தியா திகழ்கிறது. மேக் இன் இந்தியாவின் அடையாளமாக தமிழ்நாடு மாறுகிறது. மாநில வளர்ச்சி மூலம் தேச வளர்ச்சி என்பதே நமது அடிப்படை. 40க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தமிழ்நாட்டில் 400 முறை பயணம். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தால் 3 மடங்கு வளர்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.