அமலாக்கத் துறை சம்மனை 3-வது முறையாக புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் சம்மனை மீண்டும் புறக்கணித்துள்ளார் அம்மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால்.

இதனை அக்கட்சி உறுதி செய்துள்ளது. ”டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார். அமலாக்கத் துறையின் சம்மன் சட்டவிரோதமானது, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்வது மட்டுமே அதன் நோக்கம்” என்று அக்கட்சி சாடியுள்ளது.

இது தொடர்பாக ஆம் ஆம்தி கட்சி தரப்பில், “எங்கள் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை அமைப்பின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறார். ஆனால், தேர்தலுக்கு முன்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு காரணம் அவரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட விடாமல் தடுக்க வேண்டும் என்பதே. கெஜ்ரிவாலை கைது செய்வது மட்டுமே அமலாக்கத் துறையின் நோக்கமாக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பியிருக்கும் 3-வது சம்மன் இதுவாகும். ஏற்கெனவே கடந்த ஆண்டு நவ.2 மற்றும் டிச.21 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அந்த இரண்டு விசாரணைகளுக்கும் ஆஜராகாமல் அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்திருந்தார். அமலாக்கத் துறையால் முதல் சம்மன் அனுப்பப்பட்டதில் இருந்தே, விசாரணைக்கு பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்று தீவிரமான ஊகங்கள் நிலவி வருகின்றன. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் பலர் இதனை சுட்டிக்காட்டியே அறிக்கைகளை வெளியிடுகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். அக்கட்சின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ விசாரணை நடத்தி இருந்தது. ஆனால் அவர் மீது குற்றம்சாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.