“சமூக வலைதளங்களில் வாயிலாக செயல்படும் அதிமுகவினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், யாரையும் மரியாதை குறைவாகவோ, நாகரிகமற்ற முறையிலோ விமர்சனம் செய்யக் கூடாது” என்று அதிமுக ஐடி விங் பிரிவினருக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சார்பில் ‘புரட்சித்தமிழரின் MASTERCLASS’ நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய 12 மண்டலங்களின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
விரைவில் நடைபெற உள்ள மக்களவைப் பொதுத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மகத்தான வெற்றிபெறும் வகையில் பிரச்சாரப் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார்.குறிப்பாக, சமூக வலைதளங்களில் வாயிலாக செயல்படும் அதிமுகவினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், யாரையும் மரியாதை குறைவாகவோ, நாகரீகமற்ற முறையிலோ விமர்சனம் செய்யக் கூடாது.
பிற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளைப் போல மக்களிடையே வெறுப்பை உண்டாக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் மரியாதை குறைவாகவும், நாகரிகமற்ற முறையில் நடந்துகொள்ளும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும். ஏதாவது பிரச்சினை என்றால், என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். சமூகவலைதளங்களில் நமது தகவல் தொழில்நுட்பப்பிரிவு நிர்வாகிகளின் செயல்பாடுகளை மறைமுகமாக கண்காணிக்க 7 குழுக்களை அமைத்துள்ளேன். இந்தக் குழுவினர், தகவல் தொழில்நுட்பப்பிரவு நிர்வாகிகளின் செயல்பாடுகளை ரகசியமாக கண்காணித்து எனக்கு அறிக்கை அளிப்பார்கள்.
எனவே, யாரையும் மரியாதைக் குறைவாக விமர்சனம் செய்ய வேண்டும். அதேநேரத்தில், 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான, அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கி கூறுங்கள். திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ள தவறுகளை ஆக்கப்பூர்வமாக மக்களிடம் கொண்டு செல்லுங்கள். பிற கட்சியினரைப் போல இல்லாமல், மரியாதையாக பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.