மணிப்பூரில் மீண்டும் கலவரம்: பிரதமரை விளாசிய பிரியங்கா காந்தி!

மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸின் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் புத்தாண்டு தினத்தில் மீண்டும் வன்முறைச் சம்பவம் நடந்தது. அங்கே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மணிப்பூர் பள்ளத்தாக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத மர்ம கும்பல் மிரட்டி பணம் பறிக்க வந்ததே இந்த வன்முறைக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இது மணிப்பூர் தௌபால் மாவட்டத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் லிலாங் சிங்ஜாவ் பகுதியில் நடந்துள்ளது. இதனால் அங்கே மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. எங்கே மீண்டும் மாநிலம் முழுக்க வன்முறை வெடிக்குமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பிரதமர் மோடியைக் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், “மணிப்பூரில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்துள்ளனர், பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளனர்.. மணிப்பூர் மக்கள் எட்டு மாதங்களாகக் கொலை, வன்முறை மற்றும் அழிவை எதிர்கொண்டு வருகின்றனர். இவை எப்போது தான் நிறுத்தப்படும்? மணிப்பூரில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டுக் குழு டெல்லி வந்து பிரதமரைச் சந்திக்க நேரம் கோரியது. ஆனால் இன்று வரை பிரதமர் நேரம் கொடுக்கவில்லை.. பிரதமர் மோடி இதுநாள் வரை மணிப்பூருக்குச் செல்லவில்லை, மணிப்பூர் பற்றிப் பேசவில்லை, நாடாளுமன்றத்திலும் பதில் சொல்லவில்லை, அமைதியைக் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணிப்பூருக்குத் தேவையான தலைமை இதுதானா? அல்லது பிரமாண்டமாக விளம்பரங்கள் போதுமா இதை மறக்கடிக்க? அரசு இனியும் தாமதமின்றி மணிப்பூரில் உள்ள அனைத்து தரப்பினர் உடனும் பேசி, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி அமைதியைக் கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்கத் தொடங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி ‘பாரத் நியாய யாத்ரா’ என்ற யாத்திரையை நடத்துகிறது. யாத்திரை தொடங்க சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மீண்டும் அங்கே வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளது.