எண்ணூரில் அமோனியா வாயு கசிவுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பசுமை தீர்ப்பாயம்!

எண்ணூரில் நச்சு வாயுக் கசிவு விவகாரத்தில் அமோனியா வாயுவை எடுத்துச்செல்லும் குழாயை தொழிற்சாலை நிர்வாகம் அவ்வப்போது ஆய்வு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், இதற்கு யார் காரணமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளது.

சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயுக்கசிவு வெளியேறியதால் அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் போன்ற உடல்உபாதைகள் ஏற்பட்டன. பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து அந்த ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த வாயுக்கசிவு விவகாரம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. அதன்படி இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், ‘அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து100 மீட்டர் சுற்றளவில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கப்பலில் கொண்டு வரப்பட்ட அமோனியாவை தொழிற்சாலைக்கு எடுத்துச்செல்லும் குழாயில் உருவான அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. வாயுவை குளிரூட்டும் கருவியும் முறையாக செயல்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கோரமண்டல் தொழிற்சாலை தரப்பில், ‘ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு முன்பாக இப்படியொரு சம்பவம் நடந்தது இல்லை. இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை என கோரப்பட்டது.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தரப்பில், ‘ நச்சு வாயு வெளியேறிய அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதிப்பு உணரப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டும் இதேபோன்ற வாயுக்கசிவு சம்பவம் நடந்தது. அப்போது 120-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர்.

பாதிப்பு ஏற்படும்போது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கையாக தொழிற்சாலையை மூடுவதும், பின்னர் அதை திறப்பதும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் வாடிக்கையாகி விட்டது. இந்த நச்சு வாயுக் கசிவுகாரணமாக 8 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதற்காகத்தான் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறோம். மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிற்சாலையில் எப்போது ஆய்வு மேற்கொண்டது? தொழிற்சாலை நிர்வாகம் அமோனியாவை எடுத்துச்செல்லும் குழாயை ஏன் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும் விபத்து நடப்பதுஎன்பது இயற்கை. அதற்காக ஒட்டுமொத்தமாக நிறுவனத்தை மூடிவிட முடியாது. ஆனால் விபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டியது அவசியம். அமோனியா வாயுவை சேமித்து வைக்கும் தொட்டியில் 5 மடங்கு அதிகமாக அந்த வாயு சேமித்து வைத்ததே இந்த கசிவுக்கு காரணம் என மாசுகட்டுப்பாட்டு வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு தொழிற்சாலை நிர்வாகம் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். அமோனியா வாயு கசிவுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படும் என்றார்.

பின்னர் இந்த வழக்கில் கடல்சார் வாரியம், மீன்வளத்துறை, தொழில் பாதுகாப்புத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜன.8-க்கு தள்ளி வைத்துள்ளார்.