பிரதமர் மோடியின் பாசாங்கு வார்த்தைகளுக்கு தமிழ்நாடு ஏமாறாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளதாவது:-
நேற்றைய தினம் பிரதமர் முன்னிலையில் ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியதை கூட்டத்தில் அமர்ந்திருந்த பா.ஜ.க.வினர் சகிப்புத்தன்மை இல்லாமல் கோஷங்களை எழுப்பி அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதை வன்மையாகக் கண்டிக்க விரும்புகிறேன். இதன்மூலம் தமிழக பா.ஜ.க.வின் ஆணவப் போக்கு வெளிப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி உரையாற்றும் போது உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் தமிழ்நாட்டைப் பற்றிப் பேசாமல், தமிழ் மொழியை மனதார புகழாமல் என்னால் இருக்க முடிவதில்லை என்று மனசாட்சியே இல்லாமல் உண்மைக்குப் புறம்பாகப் பேசியிருக்கிறார். சமஸ்கிருத திணிப்பை செய்து வருகிற பிரதமர் மோடி அதை மூடி மறைப்பதற்கு தமிழ் மொழி மீது பாசாங்கு வார்த்தைகள் கூறுவதைக் கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.
சமீபத்தில் உலக வங்கி அறிவித்தபடி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் இந்தியாவின் கடன் காலப் போக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மிஞ்சக் கூடியதாக மாறி, இந்தியாவில் பொருளாதார சீரழிவு ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறது. இதையெல்லாம் கண்டு கொள்ளாத பிரதமர் மோடி தமது சாதுரியமான மேடைப் பேச்சின் மூலம் மக்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்களையும், துயரங்களையும் திசைத் திருப்பி அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். அவரது கனவு தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறாது.
தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிதி ஒதுக்க முடியாது என்று நிர்மலா சீதாராமன் பதில் கூறியதை எவரும் மறந்திட இயலாது. இதுவரை தமிழகத்திற்கு நிவாரண நிதியாக எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பிரதமரின் பேச்சை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை. தமிழக வெள்ள பாதிப்புக்காக நிரந்தர நிவாரணமாக ரூபாய் 12,659 கோடி நிதியுதவியை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ஜூன் 2023 இல் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபாய் 450 கோடியை இன்றைய கோரிக்கையோடு இணைத்துப் பேசுவதை விட ஏமாற்று வேலை வேறு எதுவும் இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.