ஜல்லிக்கட்டு போட்டியின்போது சாதி பெயர்களை பயன்படுத்தவே கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜல்லிக்கட்டு போட்டியின் போது சாதி பெயரை பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி அலங்காநல்லுரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதனை பார்வையிட வெளி ஊர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் வருகை தருவார்கள். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை, காளைகளுக்கான பரிசோதனைகள், ஜல்லிக்கட்டுக்கான விழா ஏற்பாடுகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது சாதி பெயரை பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதாவது ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளையின் உரிமையாளர் பெயரோடு சாதிப் பெயரைக் கூறி ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்க்கக் கூடாது உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாநகரை சேர்ந்த செல்வக்குமார் என்பவர் ஜல்லிக்கட்டு போட்டிகளை சாதி, மத ரீதியாக நடத்தகூடாது என்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஜாதி பெயரை தவிர்க்கவேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளை அவிழ்க்கும் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதி பெயர் குறிப்பிடப்பட்டு காளைகள் அவிழ்த்து விடப் படுகிறது. அரசு அதிகாரிகளின் முன்னிலையிலேயே ஜாதி பெயர் அறிவிக்கப்பட்டு அவிழ்த்து விடப்படுகிறது. இப்படியெல்லாம் செய்யக்கூடாது என கடந்த 2019-ஆம் ஆண்டிலே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் முறையாக பலரும் பின்பற்றவில்லை. எனவே, இந்த ஆண்டு இதனை சரியாக பின்பற்றவேண்டும் என்று மதுரை உயர்நிதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உத்தரவுகளை முறையாக பின்பற்றுவோம் என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதி பெயர் சொல்லி அவிழ்க்க கூடாது என்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும்” என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும் முன் தீண்டாமை உறுமொழி எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.