தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதல் நிதியை கொடுத்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
தமிழகத்துக்கு மத்திய அரசு ஒன்றுமே கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். தமிழகத்துக்கு மத்திய அரசு நிறைய கொடுத்துள்ளது. 4 வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன. 2014 – 2023 வரை தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. அதேநேரம் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி. தமிழகத்தில் இருந்து பெற்ற வரியைவிட கூடுதலாகவே நிதி கொடுத்துள்ளோம். தமிழகம், கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மாதம் தோறும் தவறாமல் நிதி கொடுத்து வருகிறோம்.
இன்னொன்று, மத்திய அரசு செஸ் வரியை வசூலித்து தமிழகத்துக்கு எதுவுமே கொடுக்கவில்லை என்கிறார்கள். பல முறை சொல்லிவிட்டேன். செஸ் வரியை கொண்டு பள்ளிக்கூடம் கட்டுவது போன்ற பணிகள் செய்யப்படுகின்றன. அப்படியாக, தமிழகத்துக்கு மொத்தமாக செஸ் வரி மூலமாக 2014-15 முதல் இன்றுவரை 57,557 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு 37,965 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். அதேபோல் பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்காக, 11,116 கோடி ரூபாயும், கிராமங்களில் வீடுகள் கட்டுவதற்காக 4,839 கோடி ரூபாயும் கொடுத்துள்ளோம், கிராமங்களில் சாலை அமைக்கும் திட்டத்துக்கு 3,637 கோடி ரூபாய் என செஸ் வரியாக வசூல் செய்ததை தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது.
ஜி.எஸ்.டி வரி குறித்து எப்போதும் கேள்வி கேட்கப்படுகிறது. தமிழகத்தில் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி தமிழகத்துக்கு கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். இது உண்மை இல்லை. மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி முழுமையாக மாநிலங்களுக்கே வழங்கப்படுகிறது. எஸ்.ஜி.எஸ்.டி எனப்படும் ஸ்டேட் ஜி.எஸ்.டி வரி நூறு சதவீதம் மாநிலங்களுக்கே செல்கிறது.
ஐ.ஜி.எஸ்.டியில் 50 சதவீதம் மாநிலத்துக்கும் 50 சதவீதம் பிரித்து வழங்கப்படும். உதாரணத்துக்கு, 2022 -23 மார்ச் 31 வரை தமிழகத்துக்கு எஸ்.ஜி.எஸ்.டி வரியில் 36,353 கோடி ரூபாயும், ஐ.ஜி.எஸ்.டி வரியில் மாநிலத்துக்கு 32,611 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இதே ஐ.ஜி.எஸ்.டி வரியில் மத்திய அரசுக்கே 27,360 கோடி ரூபாய்தான். ஆக, மத்திய அரசை விட மாநில அரசுக்கே நிதி அதிகம் கிடைக்கிறது. அனைத்து மாநிலங்களுக்கும் இதே நிலைமைதான்.
வரிகளில் இருந்து எந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வது நிதி ஆணையம்தான். தமிழ்நாட்டின் மேல் விரோத மனப்பான்மை உடன் கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் இருந்தது இல்லை. ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி சரியாக கொடுக்கப்பட்டு வருகிறது. அதுதவிர சில மாதங்களில் முன்கூட்டியே நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.