மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் என்னை முடக்கவே அமலாக்கத் துறை சம்மன்: அரவிந்த் கெஜ்ரிவால்

“நான் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதை தடுக்கும் நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுகிறது” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறை மீது குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை 3 முறை சம்மன் அனுப்பிய நிலையிலும் விசாரணைக்கு ஆஜராகாத ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இதுதொடர்பாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுபானக் கொள்கை ஊழல் பற்றி நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இரண்டு வருடங்களில் பாஜகவின் அனைத்து ஏஜென்சிகளும் பல ரெய்டுகளை நடத்தி பலரை கைது செய்தாலும் ஒரு பைசா ஊழலை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் ஊழல் நடந்திருந்தால், அத்தனை கோடிகளும் எங்கே போயின? பணமெல்லாம் காற்றில் மாயமாகிவிட்டதா?. ஊழல் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

மதுபானக் கொள்கை வழக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய முடியாத வகையில் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. பாஜக இப்போது என்னைக் கைது செய்ய விரும்புகிறது. எனது மிக முக்கியமான சொத்து, மூலதனம், பலம் அனைத்துமே எனது நேர்மைதான். ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், சட்டவிரோத சம்மன்களை அனுப்புவதன் மூலமும் பாஜக என்னை இழிவுபடுத்த விரும்புகிறது, என் நேர்மையைக் கெடுக்க விரும்புகிறது.

எனக்கு அனுப்பிய சம்மன்கள் சட்டவிரோதமானது என்று எனது வழக்கறிஞர்கள் என்னிடம் கூறியுள்ளனர். அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களுக்கு விரிவான விளக்கத்தை அனுப்பியிருக்கிறேன். ஆனால், ஒரு வாதத்திற்கு கூட அமலாக்கத் துறை அதற்கு பதிலளிக்கவில்லை. இந்தப் போலி வழக்கில், பல ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர், தொடர்ந்து சிறையில் அடைத்து வருகின்றனர். அவர்களில் யாருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை. யாருக்கு எதிராகவும் அவர்களால் எதையும் நிரூபிக்க முடியவில்லை.

எனவே அவர்களின் சட்டவிரோத சம்மன்களை நான் மதிக்க வேண்டுமா?. பாஜகவின் நோக்கம் நியாயமான விசாரணை அல்ல. மாறாக அரசியல் மிரட்டல். ஆம் ஆத்மி கட்சியை லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இருந்து தடுப்பதே. விசாரணை என்ற பெயரில் என்னை அழைத்து, பின்னர் என்னை கைது செய்ய விரும்புகிறார்கள். அப்படி செய்தால் நான் மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியாது அல்லவா. அதுவே பாஜகவின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.