சோமாலியா அருகே 15 இந்திய மாலுமிகளுடன் சரக்கு கப்பல் கடத்தல்!

15 இந்திய மாலுமிகளுடன் சோமாலியா அருகே சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கடத்தப்பட்ட கப்பல் இருக்கும் இடம் நோக்கி கடற்படை கப்பல்கள், விமானங்கள் விரைந்துள்ளன.

அரபிக் கடலில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்வி ருயின் என்ற சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த சரக்கு கப்பலில் 18 மாலுமிகள் பயணித்தனர். இந்த கப்பல் கடத்தப்பட்ட போது ஏடன் வளைகுடாவில் இந்திய போர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. இதனையடுத்து எம்வி ருயின் சரக்கு கப்பலை மீட்க போர்க் கப்பல்களும் விமானங்களும் களத்தில் இறங்கின. ஐரோப்பிய யூனியன் கடற்படையும் இணைந்து கொண்டது. இந்த கடத்தலின் போது படுகாயமடைந்த மாலும் ஒருவரை இந்திய கடற்படை மீட்டது. அரபிக் கடல் பகுதியில் சோமாலியா கடற்கொள்ளையர்களின் கடத்தல் அச்சத்துக்கு நடுவேதான் சரக்கு கப்பல்கள் பயணிக்கின்றன.

இந்த நிலையில் 15 இந்திய மாலுமிகளுடன் எம்வி லைலா நோர்ஃபோக் என்ற சரக்கு கப்பல் சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. லைபீரியா நாட்டு கொடியுடன் வந்த இந்த சரக்கு கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்தக் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து ஐ.என்.எஸ். போர்க் கப்பல், கடற்படை விமானங்கள் உடனடியாக கடத்தப்பட்ட கப்பல் இருப்பிடத்தை நோக்கி விரைந்துள்ளன. மேலும் கடத்தப்பட்ட இந்திய மாலுமிகளைத் தொடர்பு கொண்டு கடற்படையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.