பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சிறப்பு டிஜிபி பதவியில் இருந்தவர் ராஜேஷ் தாஸ். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்த போது சிறப்பு டிஜிபியாக இருந்தவர். எடப்பாடி சுற்றுப்பயணம் செல்லும் போது பெண் எஸ்பி அதிகாரி ஒருவரைத் தனது காரில் அழைத்துச் செல்லும் போது அந்த பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த பெண் அதிகாரி புகார் அளிக்கச் செல்லும் போது நடுவழியில் அவரது காரை தடுத்து நிறுத்தி சாவியை பிடுங்கி, முன்னாள் டிஜிபிக்கு உதவியதாக அப்போது செங்கல்பட்டு எஸ்பியாக இருந்த கண்ணன் மீதும் புகார் எழுந்தது. இதையடுத்து அந்த பெண் தலைமைச் செயலாளரிடம் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்திருந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து சிறப்பு டிஜிபி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், அவருக்காகப் புகார் கொடுக்க சென்ற பெண் அதிகாரியை மிரட்டிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இருவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர். இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தது. இதை நீதிபதி புஷ்ப ராணி விசாரித்து வந்தார். இந்த வழக்கில் கடந்த ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. பாலியல் தொல்லை வழக்கில் ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில், நாளை ஜன. 6ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது. இதற்கிடையே இந்த மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி ராஜேஸ் தாஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், இந்த விவகாரத்தில் இன்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளிக்க இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைப்பதாகச் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.