வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண நிதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் அளவில் விசிகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, வள்ளுவர் கோட்டம்அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சித்தலைவர் திருமாவளவன் தலைமை வகித்தார். உடன்கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
தமிழகத்தில் பாஜக ஆட்சியில்இல்லை என்பதால் அலட்சியப்படுத்துவதை ஏற்க முடியாது. பேரிடராக அறிவிக்க முடியாது என்று கூறும் அதிகாரத்தை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கியது யார்?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றங்களைச் செய்ய முடியும். எனவேதான் வளர்ந்த நாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறையை பின்பற்றுகின்றனர். தமிழகத்தில் கூட கடந்த தேர்தலில் சில மையங்களில் வாக்குப் பதிவு, வாக்குகணக்கு இடையே ஒத்துப்போக வில்லை. எனவே, 100 சதவீதம் விவிபேட் இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
பாஜக ஆளும் மாநிலங்களில் கேட்கும் நிதியை விட கூடுதலாக கொடுக்கிறார்கள். பாஜக ஆளாத மாநிலங்கள் வைக்கும் கோரிக்கையைக் கூட அலட்சியப்படுத்துகிறார்கள், தமிழகத்தில் பாஜக இல்லை என்பதால் அக்கட்சியினர் விடுக்கிற கோரிக்கையையும் கூட மத்தியில் உள்ளவர்கள் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.
சென்னையில் டிசம்பர் 4ஆம் தேதி கடுமையான புயலை சந்தித்ததோடு வரலாறு காணாத மழையும் பெய்தது. சென்னையே இரண்டு நாட்கள் வெள்ளத்தில் மூழ்கியது. யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாத அளவு பெருமழையாக அது இருந்தது. ஆனால், நமக்கு வழக்கமாக தரும் நிதியை தந்துவிட்டு இனி கூடுதலாக தருவதற்கு வாய்ப்பு இல்லை என்று அலட்சியமாக கூறுகிறார்கள்.
சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது நம்மால் ஓடோடிச் சென்று உதவி செய்ய முடியவில்லை. நானே இரண்டு நாட்கள் வரை வேளச்சேரிக்குள் சிக்கிக்கொண்டேன். எனக்கே முத்து மாரியம்மன் கோயிலில் சமைத்த சாம்பார் சாதம்தான் கிடைத்தது, இரண்டு நாட்கள் மின்சாரமின்றி தவித்தோம், உணவு விடுதிகள் கூட இல்லை. ஆனால் தென் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டபோது 3 நாட்களில் 70 லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் உடைகளை விசிகவினர் தனக்கு அனுப்பி வைத்தனர் என்று இதனால் தென் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் ஓரளவு விசிகவால் உதவ முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.