அச்சம் தேவையில்லை என்று சொன்னால் மக்களின் பயம் போய் விடுமா?: விஜயபாஸ்கர்!

வெறுமனே அச்சம் தேவையில்லை என்று சொன்னால் மக்களின் பயம் தணிந்து விடுமா? என கொரோனா உயிரிழப்பு குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் JN1 என்ற உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. முதலில் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் தற்போது பிற மாநிலங்களிலும் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதிய கொரோனாவால் தமிழகத்துக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் கூறி வந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இணை நோய் உள்ளவர்களை நோய் பாதிப்பில் இருந்து தடுத்திட என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? என தமிழக அரசுக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து அண்டை மாநிலங்களில் மிகக்கடுமையாக பரவி வரும் நிலையில் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 42 வயது நபர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. CovidIsNotOver என்று தொடர்ந்து வலியுறுத்தி உருமாறிய ஜே.என்1 வைரஸ் பரவி வருவதை சுட்டிக்காட்டி தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசு இதுவரை என்ன மாதிரியான வழிமுறைகளை மக்களுக்கு வகுத்திருக்கிறது? மாநில எல்லைகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எந்தளவுக்கு உறுதிப்படுத்தி இருக்கின்றது? வெறுமனே அச்சம் தேவையில்லை என்று சொன்னால் மக்களின் பயம் தணிந்து விடுமா? என தெரியவில்லை.

அமெரிக்கா போன்ற நாடுகளில் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்வதாகவும், கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுகின்ற பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள். நம் தமிழ்நாட்டின் நிலைதான் என்ன? இணை நோய் உள்ளவர்களை நோய் பாதிப்பில் இருந்து தடுத்திட என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? தடுப்பூசிகளின் இருப்பு என்ன? இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு அளவீடு என்ன? குறிப்பாக, வைரஸ் குறித்த செரோ-சர்வேயின் (SERO Survey) தரவுகள் என்ன சொல்கின்றன? என விடை தெரியாத பல கேள்விகளுக்கு பதில் மட்டுமல்ல செயலில் காட்ட வேண்டியது அரசின் கடமை. இம்மரணத்திற்கு பிறகாவது மக்களை பதட்டமடைய செய்யாமல், சுகாதாரத்துறை விழித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.