ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலில் இருந்து திடீரென்று கரை ஒதுங்கிய விசித்திர தேரால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். கோவில் அருகே கடலில் குளிக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் தான் ராமேஸ்வரம் ஓலைக்குடா கலங்கரை விளக்கம் அருகே கடலில் இருந்து விசித்திரமான தேர் ஒன்று புத்தர் சிலையுடன் கரை ஒதுங்கிய சம்பவம் நடந்துள்ளது. அதாவது ராமேஸ்வரம் ஓலைக்குடா கலங்கரை விளக்கம் கடலில் தேர் வடிவிலான மர்மமான பொருள் ஒன்று மிதந்து வந்தது. இதை அங்குள்ள மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் அது கரை ஒதுங்கியது. அப்போது அது மரம் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட தேர் என்பது அதில் புத்தர் சிலை மற்றும் பூஜை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த தேரை பார்வையிட்டனர். அப்போது சுமார் 10 அடி உயரத்தில் மூங்கில்களை பயன்படுத்தி தேர் உருவாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த தேரில் இருந்த கொடி மற்றும் தேரில் வேற்று மொழியில் எழுதி வைக்கப்பட்டு இருந்த வாசகங்களை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் மியான்மர், தாய்லாந்து நாடுகளில் பொதுவாக கடல்வளம், மீன்வளர பெருக வேண்டி கடலில் தேர் விடுவது வழக்கமான ஒன்று என கூறப்படுகிறது. இதனால் இந்த தேரும் அந்த நாடுகளில் இருந்து கடலில் விட்டு இருக்கலாம். காற்றின் வேகத்தில் இந்த தேர் ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தேர் என்பது எங்கிருந்து வந்தது? பின்னணி என்ன? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.