சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், இன்னும் சில மணி நேரங்களில் எல்-1 புள்ளியை அடைய இருக்கிறது.
பூமி உயிருடன் இருப்பதற்கு சூரியன் மிக முக்கியம். ஆனால் இதே சூரியன் அவ்வப்போது வெளியேற்றும் ஒளி புயலால், பூமிக்கு பேராபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே இது தொடர்பாக ஆய்வு செய்ய இந்தியா முதன் முதலில் ஆதித்யா எல்-1 எனும் விண்கலகத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதியன்று அனுப்பியது. இந்த விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மெல்ல மெல்ல சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள எல்-1 புள்ளியை நெருங்க தொடங்கியுள்ளது. 127 நாட்கள் பயணத்திற்கு பின்னர் இன்று ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியில் நிலை நிறுத்தப்படுகிறது. ஆனால் இதில் சில சிக்கல் இருப்பதாக மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
முதலில் எல்-1 புள்ளியை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். விண்வெளியில் நிறை கொண்ட அனைத்து பொருட்களுக்கும் ஈர்ப்பு விசை இருக்கும். சூரியனுக்கு அதிக அளவு ஈர்ப்பு விசை இருக்கிறது. பூமிக்கு கொஞ்சம் இருக்கிறது. எனவே இந்த இரண்டு ஈர்ப்பு விசைகளும் குறைவாக இருக்கும் இடத்தைதான் எல்-1 புள்ளி என்று அழைக்கிறோம். இந்த புள்ளியில் ஒரு பொருள் நிலை நிறுத்தப்படும்போது, அது சூரியனை நோக்கி ஈர்க்கப்படாது. அதேநேரம் பூமியின் ஈர்ப்பு விசையாலும் பாதிக்கப்படாது. ஆக இந்த இடத்தில்தான் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்படுகிறது. இது மேலும் கீழும் உள்ள ஒரு வட்டப்பாதையில் நின்று சூரியனை ஆய்வு செய்யும். இந்த பாதைக்கு ‘ஒளி வட்டம்’ என்று பெயர்.
பூமி சூரியனை சுற்றும்போது இதுவும் சூரியனை சுற்றும். இப்படி நடக்கும்போது விண்கலத்தின் பாதை சிறிது மாறுபடும். எனவே இதனை சரி செய்ய 12 சிறிய ராக்கெட்கள் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இது தன்னிச்சையாக இயங்கி தனது பாதையை சரி செய்துக்கொள்ளும். ராக்கெட்டில் எரிபொருள் எவ்வளவு நாட்கள் இருக்கிறதோ அந்த அளவுக்குதான் இந்த விண்கலமும் பயன்பாட்டில் இருக்கும். நம்முடைய கணிப்பு படி 5 ஆண்டுகள் வரை ராக்கெட்டில் எரிபொருள் இருக்கும். அதன் பின்னர் தீர்ந்துவிடும். இந்த ராக்கெட்டில் பிரச்னை ஏற்பட்டால் மொத்த மிஷனும் தோல்வியடைந்துவிடும்.
சமீபத்தில் சந்திரனில் இறங்கி ஆய்வு மேற்கொண்டதை போல சூரியனிலும் இறங்கி ஆய்வு செய்ய போகிறோமா? என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். ஆனால் இந்த ஆய்வு அப்படியல்ல. சூரியனில் நம்மால் தரை இறங்க முடியாது. காரணம் சூரியனில் தரை பரப்பு என்று ஒன்று கிடையாது. நமது வீடுகளில் பயன்படுத்தும் டியூப் லைட்டுகளில் சில வாயுக்கள்தான் இருக்கின்றன. அதிலிருந்துதான் வெளிச்சம் வருகிறது. அதேபோலதான் சூரியனும். சூரியன் பிலாஸ்மாக்களால் ஆனது. எனவே அதில் தரையிறங்க முடியாது. மட்டுமல்லாது, சூரியனின் மேற்பரப்பில் சுமார் 6000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் இருக்கும். இது அனைத்து உலோகங்களையும் உருக்கிவிடும்.
மற்றொரு கேள்வி, நாம் ஏன் சூரியனை ஆய்வு செய்ய வேண்டும் என்பதுதான். சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் இருக்கின்றன. இதில் 4 கோள்களில் மட்டும்தான் தரை பரப்பு இருக்கிறது. அதிலும் பூமியில் மட்டும்தான் வளி மண்டலம் இருக்கிறது. வளி மண்டலம் இருக்கும் கோள்களில்தான் உயிர்கள் வாழ முடியும். புதன் கிரகத்தை எடுத்துக்கொண்டால் அங்கு சுத்தமாக வளிமண்டலம் இல்லை. காரணம் சூரியனிலிருந்து வெளிவந்த சக்திவாய்ந்த கதிர்கர்கள்தான். இந்த கதிர்கள் புதனின் வளி மண்டலத்தை வழித்து எடுத்துவிட்டது. வெள்ளி கிரகத்தில் அடர்த்தியான வளிமண்டலம் இருக்கிறது. ஆனால் அழுத்தம் அதிகம். எனவே உயிர்கள் வாழ முடியாது. செவ்வாய் கிரகத்திலும் ஒரு காலத்தில் வளிமண்டலம் இருந்திருக்கிறது. ஆனால் அந்த கிரகத்தின் கருவில் இருந்த லாவா போன்ற நெருப்பு குழம்பு முழுவதுமாக கெட்டியாகிவிட்டது. எனவே காந்த சக்தியை இந்த கிரகம் இழந்துவிட்டது. இதனால் சூரியனிலிருந்து வெளி வரும் கதிர் செவ்வாயின் வளி மண்டலத்தை முழுவதுமாக அழித்துவிட்டது.
பூமியின் அடியில் இன்னும் நெருப்பு குழம்பு இருக்கிறது. இது காந்த சக்தியை வெளிப்படுத்தி வருகிறது. அதனால்தான், ஒரு காந்தத்தை எடுத்து தொங்கவிட்டால் அதன் ஒரு முனை சரியாக வடக்கையும், மற்றொரு முனை தெற்கு திசையையும் காட்டுகிறது. இந்த காந்த சக்தி வளி மண்டலத்தை அழியாமல் காத்திருக்கிறது. என்னதான் காந்த சக்தி நமக்கு பாதுகாப்பானதாக இருந்தாலும், சூரியனின் கதிர்கள் அதிக அளவுக்கு பூமியை தாக்கினால் அதை சமாளிப்பது கடினம். எனவே இப்படி ஒரு ஆபத்து குறித்து முன்கூட்டியே தெரிந்துக்கொள்ளதான் நாம் ஆதித்யா எல்-1 விண்கலத்தை அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.