திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிகாரி அங்கித் திவாரியிடம் துறை ரீதியான விசாரணை நடத்த அனுமதி கோரி, அமலாக்கத் துறை சார்பில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கை முடித்துவைத்தது. இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரிக்காமல் இருப்பதற்காக லஞ்சம் தர வேண்டும் என்றுகூறி, மதுரை அமலாக்கத் துறைஅதிகாரி அங்கித் திவாரி, மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் இரண்டாவது தவணையாக ரூ.20 லட்சம் பெற்றார். அப்போது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அவரைக் கைது செய்து, மதுரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அங்கித் திவாரியிடம் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி, அமலாக்கத் துறை சார்பில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை திண்டுக்கல் ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.1-ல் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த வழக்கின் விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட் பிரியா உத்தரவிட்டார்.