பிரதமர் மோடி பற்றி பூரி சங்கராச்சாரியார் சொன்ன வார்த்தை: மனோ தங்கராஜ் கேள்வி!

அயோத்தியில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. ஆனால் இந்த விழாவில் பங்கேற்க பூரி சங்கராச்சாரியார் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது குறித்து பாஜகவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் வரும் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. 22ஆம் தேதி பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார்.

குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. ஆனால் இந்த விழாவில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று என்று பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி கூறியுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, “அயோத்தியில் நடைபெறவிருக்கும் விழா தொடர்பாக எங்கள் மடத்திற்கு அழைப்பிதழ் வந்திருக்கிறது. என்னுடன் ஒரே ஒயொரு நபர் மட்டும் அனுமதிக்கப்படுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் என்னுடன் 100 நபர்கள் அனுமதிக்கப்பட்டாலும் நான் அந்த விழாவுக்கு போகமாட்டேன். இதற்காக நான் சற்றும் கவலைப்படவில்லை. ஆனால், மற்ற சனாதன இந்துக்களைப் போலவே மகிழ்ச்சியாக இருக்கிறேன். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மதச்சார்பற்றவராக காட்டிக் கொள்ளும் கோழை அல்ல. தன்னை மதச்சார்பற்றவராக சித்தரிப்பதில் விருப்பம் இல்லாதவர். அவர் தைரியமானவர், இந்துத்துவவாதி. அத்துடன், சிலை வழிபாட்டின் கருத்தாக்கத்தில் பெருமை கொள்கிறார். ஆனால், சங்கராச்சாரியார் என்ற முறையில் நான் அங்கு என்ன செய்வேன்? பிரதமர் மோடி சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்யும்போது,​​நான் அவரை கைதட்டி வாழ்த்த வேண்டுமா?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்து மதத்தின் முக்கிய தலைவரான ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பி, ராமர் கோயில் விழாவிற்கு வருகை தர மறுப்பு தெரிவித்திருப்பது, பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பாஜகவுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில், “சனாதன சாதிய கட்டமைப்பிற்கு எதிராக சமத்துவத்தை வலியுறுத்தும் எங்களை கேள்வி கேட்கும் பாஜகவினர் இப்போ எங்கே? பூரி சங்கராச்சாரியாரை கண்டிக்க பாஜகவுக்கு தைரியம் உள்ளதா? ‘பிரதமர் மோடி ராமர் சிலையை தொடுவதை என்னால் பார்க்க முடியாது. அவர் அதை தொடக்கூடாது புரோகிதர் தான் தொட வேண்டும், அவர் தொடுவதாக அறிவித்துள்ளதால் நான் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்’ என பூரி சங்கராச்சாரியார் அறிவிப்பு. இதேதான் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் திரௌபதி முர்முவுக்கும் நடந்தது” என்று பதிவிட்டுள்ளார்.