கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு கலைஞர் பெயர் வைத்ததில் எந்த தவறும் இல்லை: சேகர்பாபு

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயர் வைத்ததில் எந்த தவறும் இல்லை” என்று கூறியுள்ளார்.

சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதிசுவாமி க்கோயிலில் இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம், அரசு இசைக் கல்லூரி மற்றும் ராஜா அண்ணாமலை மன்றம் தமிழ் இசை கல்லூரியைச் சேர்ந்த 108 மாணவ மாணவியர் ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுரங்களை பாராயணம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மார்கழி மாதத்தை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை பாசுரங்களை பாராயணம் செய்கின்ற நிகழ்வு கடந்தாண்டு முதன் முதலாக திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி சுவாமி கோயிலில் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம், அரசு இசைக் கல்லூரி மற்றும் ராஜா அண்ணாமலை மன்றம் தமிழ் இசை கல்லூரியைச் சேர்ந்த 108 மாணவ, மாணவிகள் திருப்பாவை பாசுரங்களை பாராயணம் செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திட்ட இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களுக்கும், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இதைபோலவே, கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யும் நிகழ்வு இசைக் கல்லூரி மாணவர்களால் கடந்த ஆண்டு வடபழனி கோயிலிலும், இந்த ஆண்டு கந்தக் கோட்டத்திலும் நடைபெற்றது.

மாதந்தோறும் பவுர்ணமி நாளன்று 17 கோயில்களில் 108 சுமங்கலி பெண்கள் பங்குபெறுகின்ற திருவிளக்கு பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது. கோயில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் வகையில் முதலில் மயிலாப்பூரிலும், கடந்தாண்டு 5 கோயில்களிலும் நடைபெற்றது. இந்த ஆண்டு கூடுதலாக இரண்டு கோயில்களையும் இணைத்து 7 கோயில்களில் மகா சிவராத்திரி விழா நடத்தி உள்ளோம். அதேபோல 10 பிரசித்தி பெற்ற அம்மன்களை ஒரே இடத்தில் வடிவமைத்து இந்தாண்டு நவராத்திரி பெருவிழாவை கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகளோடு 10 நாட்கள் நடத்தப்பட்டது.

திராவிட மாடல் ஆட்சியில் கோயில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தினை 17 கோயில்களுக்கும், நாள்முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை 8 கோயில்களுக்கும் விரிவுப்படுத்தி உள்ளோம். மேலும், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி 20 திருக்கோயில்களில் செயல்படுத்தி வருகிறோம். திருக்கோயில்கள் சார்பில் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவத் கோயில்களுக்கும் சுற்றுலாத் துறையுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது. ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுப்பயணமாக கடந்த ஆண்டு 200 நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ஆண்டு 300 நபர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இதற்கான மொத்த செலவினத்தையும் தமிழக அரசே ஏற்று செயல்படுத்தி வருகிறது.

வள்ளலாருக்கு முப்பெரும் விழாவை நடத்தி பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல் வடலூரில் ரூ.99.90 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைத்திட அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரும் பிப்ரவரி மாதத்தில் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார். தமிழக முதல்வரின் உத்தரவின்படி, திருவான்மியூர், பாம்பன் குமரகுருபர சுவாமி கோயிலில் மயூர வாகன சேவன விழாவின் 100-வது ஆண்டினை சிறப்பான முறையில் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி 1967-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பாம்பன் சுவாமிகளின் வரலாற்று புத்தகத்தை புதுப்பொலிவோடு மீண்டும் மறுபதிப்பு செய்து வெளியிட உள்ளோம். அன்றைய நிகழ்ச்சியில் 108 இசைக் கல்லூரி மாணவ, மாணவியர் பாம்பன் சுவாமிகளால் பாடப்பட்ட சண்முக கவசம் மற்றும் குமாரஸ்த்தவம் ஆகியவற்றை பாராயணம் செய்யும் நிகழ்வும், ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுவதோடு, நாள் முழுவதும் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, இப்படி பல்வேறு புதிய முன்னெடுப்புகளை செயல்படுத்தி இறையன்பர்கள் மகிழ்ச்சியோடு திகழ்கின்ற வகையில் முதல்வர் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகின்ற பக்தர்களிடமிருந்து ஏதாவது கோரிக்கை வரப்பெற்றால் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அவர்கள் செல்வதற்குண்டான உதவிகளை செய்வதற்கு இந்து சமய அறநிலைத் துறை தயாராக இருக்கின்றது.

மறைந்த முதல்வர் கருணாநிதி சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, உழைக்கும் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்துக்கும், தமிழகத்துக்கும், தமிழ் மொழிக்கும் 80 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து பெருமை சேர்த்தவர். தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்வதற்கும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் உயர்வுக்கும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தினால் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயர் வைத்ததில் எந்த தவறும் இல்லை.
நாவலரின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடினோம். தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் உழைத்திட்ட தலைவர்களுக்கு பெருமை சேர்ப்பதே முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற திராவிட மாடல் ஆட்சி என்பதை சீமானுக்கு பதிலாகக் கூற கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.