“திமுக எல்லாம் சமூக நீதி பற்ற பேச என்ன தகுதி இருக்கிறது.. சமூக நீதி என்ற வார்த்தையை உச்சரிக்க கூட அந்தக் கட்சிக்கு அருகதை கிடையாது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் நல்லதொரு அரசியலுக்காக மக்கள் ஏங்கி தவிப்பதை பார்க்க முடிந்தது. கொள்ளையடிக்கும் கூட்டங்கள் ஒழிந்து போய் மீண்டும் காமராஜர் ஆட்சி மலர்ந்துவிடாதா என்று ஒவ்வொரு தமிழனும் மனதிற்குள் பொருமி வருகிறார்கள். அந்த அளவுக்கு ஒரு மோசமான ஆட்சியை தான் திமுக தந்து கொண்டிருக்கிறது.
சமூக நீதி சமூக நீதி என்று வாய் கிழிய மட்டுமே திமுக பேசி வருகிறது. மற்றபடி செயலில் ஒன்று கூட இல்லை. இன்றைக்கு திமுக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களில் வெறும் 2 பேர் மட்டும்தான் பட்டியலினத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகள். இதுதான் திமுகவின் சமூக நீதி. சரி, அந்த 2 பேருக்கும் அமைச்சரவை பட்டியலில் 33, 34-வது இடம்தான் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது கடைசி இடம். சும்மா பெயரளவுக்கு அவர்களுக்கு சாதாரண துறைகளை கொடுத்துவிட்டு, இன்று சமூக நீதி சமூக நீதி என்று திமுக கத்திக் கொண்டிருக்கிறது. சமூக நீதி பற்றி பேச கொஞ்சமாவது திமுகவுக்கு அருகதை இருக்கிறதா?. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.