ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டணி அமைத்தது என்றால் அது தமிழ்நாட்டில் தான்: ஓ. பன்னீர் செல்வம்

உலகத்திலேயே ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டணி அமைத்தது என்றால் அது தமிழ்நாட்டில் தான் என்று ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கோவையில் ஓபிஎஸ் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு ஆலோசனை குழு என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருப்பத்தூரில் நடைபெற்ற தனது ஆதரவாளர்களுடான ஆலோசனைக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் பேசியதாவது:-

கொங்கு மண்டலத்தில் ஈரோடு மாவட்டத்தில் 1989 ஆம் ஆண்டில் ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்றபோது கூட அங்கு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றார். அந்த ஈரோடு மாவட்டத்தில் தற்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் அதிமுக 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. இதற்கு காரணம் யார்?… எடப்பாடி பழனிசாமி.. உங்களுடைய உணர்வு.. உங்களுடைய ஆத்திரம்.. ஜெயலலிதா அமைத்து கொடுத்த ஆட்சியை இழந்திருக்கிறோம் என்றால் அதற்கு யார் காரணம்? எல்லாருக்கும் தெரியும் எடப்பாடி தான்.

ஏகப்பட்ட காரணம் இருக்கிறது. எனக்கு எல்லாம் ஒன்றுமில்லை. எல்லாருக்கும் ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். தமிழக மக்கள், கட்சிக்காரர்கள் என எல்லாருக்கும் ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். ஏப்ரல் மாதம் கொடநாடு கொலை, கொள்ளையால் பச்சிளம் குழந்தை உள்பட 6 உயிர்கள் போய்விட்டது. தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் என்ன சொன்னார்?.. ஆட்சி அமைத்த 3 மாதத்தில் கொடநாடு வழக்கை விசாரித்து உண்மை குற்றவாளிக்கு தண்டனை பெற்று தருவேன் என்று சொன்னார். ஆனால் இப்போது 3 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஏன் இவ்வளவு நாட்கள் ஆகியும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவில்லை. இதனால் தான் நான் கேட்கிறேன் எங்களுக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும். தமிழக மக்கள் எல்லாருக்கும் தெரியும். தொண்டர்களுக்கும் தெரியும். ஆனால் யாரும் வெளிப்படையாக சொன்னதில்லை. ஸ்டாலின் சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்துவார்கள்.

நான் அப்போ அவர் கூட இல்ல. ஏப்ரல் மாதம் தான் கொலை, கொள்ளை எல்லாம் நடந்தது. நான் சேர்ந்தது ஆகஸ்ட் மாதம். 5 மாதம் கழித்து தான் சேர்ந்தேன். அப்போதே நான் ஒரு அறிக்கை விட்டிருந்தேன். அம்மா இருந்த இடத்திலே இப்படி ஒரு கொலை சம்பவம் நடந்திருக்கிறது. இதில் உண்மையை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் எடப்பாடியை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதற்கு பின்னால் அங்கே என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும்.

உலகத்திலேயே ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டணி அமைத்தது என்றால் அது தமிழ்நாட்டில் தான். ஆனா எடப்பாடி ஒரு பிரஸ்மீட்டில் என்னையை பார்த்து சொல்கிறார். ஓபிஎஸ்ஸா அவர் திமுகவிற்கு போய்விட்டார் என்று. ஜெயலலிதா எந்த அளவு என்னை நம்பியிருந்தால், என்னைவிட மூத்த அமைச்சர்கள், தலைவர்கள் இருந்தாலும் என்னை நம்பி தானே முதல்வர் பதவியை கொடுத்தாங்க.. ஜெயலலிதா எந்த அளவுக்கு என்ன எடைபோட்டிருப்பாங்க. இதுவரை அதிமுக சரித்திரத்தில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக பொருளாளர் பதவியில் இருந்திருக்கிறேன். ஜெயலலிதா அந்த பதவியை கொடுத்தார். அந்த அளவுக்கு நான் நாணயமிக்கவனாக நடந்துகொண்டேன். இவ்வாறு ஓ பன்னீர் செல்வம் கூறினார்.