குற்றவாளிகளுக்கு பாஜக எப்போதும் துணை நிற்கிறது: அசாதுதீன் ஒவைஸி குற்றச்சாட்டு!

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான வாக்குறுதிகள் வெற்று என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

பில்கிஸ் பானுவின் பலாத்கார குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவித்ததற்காக குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார் ஒவைஸி. இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன், எதிர்காலத்தில் அனைத்து பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கும் எதிராக இது ஒரு முன்னுதாரணமாக செயல்படும் என்று நம்புகிறேன். நீங்கள் ஒரு அரசியல் சித்தாந்தத்தை உறுதிப்படுத்துகிறீர்கள் என்பதற்காக, நீங்கள் விடுவிக்கப்பட மாட்டீர்கள். நரேந்திர மோடி நாரி சக்தி பற்றி பேசும்போது, அது வெற்று கூற்று என்பது தெரிகிறது. அவர்கள் பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். குஜராத் மற்றும் மத்திய பாஜக அரசாங்கம், அந்தக் குற்றவாளிகளை விடுவிக்க உதவின – அவர்கள் பில்கிஸ் பானுவிடம் பேச வேண்டும் மற்றும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் குற்றவாளிகளை விடுவிப்பதற்கு இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள் ஒப்புதல் அளித்ததையும் அசாதுதீன் ஓவைசி சுட்டிக்காட்டினார். “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துணை நிற்பதற்கு பதிலாக, இந்த கொடூர குற்றத்தை செய்த குற்றவாளிகளுக்கு பாஜக எப்போதும் துணை நிற்கிறது என்று நான் முதல் நாளில் இருந்து கூறி வருகிறேன். பில்கிஸ் பானு தான் இவ்வளவு தைரியமாக போராடினார். அவரை பாதுகாக்க முடியாத அதே குஜராத் அரசு, குற்றவாளிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தது” என்றார் ஒவைஸி.