நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 10% வேலைவாய்ப்பின்மை நிலவுவதாக காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தொடர்பாக அசாமில் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபால் கூறியதாவது:-
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் தொடங்க உள்ள யாத்திரை அரசியல் காரணங்களுக்காக அல்ல. நாட்டின் ஏழை எளிய மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. நாட்டில் வெறுப்புக்குப் பதிலாக அன்பு பரவ வேண்டும் என்பதை நாங்கள் இந்த யாத்திரையில் வலியுறுத்துவோம்.
நமது நாட்டின் இளைஞர்கள் மிகப் பெரிய ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் மிகப் பெரிய அதிருப்தியில் இருக்கிறார்கள். நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10% வேலைவாய்ப்பின்மை உள்ளது. நாட்டின் இளைஞர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளானால் நாட்டின் எதிர்காலம் என்னாவது? நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு குறித்தும், நமது நாட்டின் விவசாயிகள் சந்தித்து வரும் பேரழிவு குறித்தும் இந்த யாத்திரையில் நாங்கள் பேசுவோம். இளைஞர்களுக்கு நீதி வேண்டும், பெண்களுக்கு நீதி வேண்டும், விவசாயிகளுக்கு நீதி வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு நீதி வேண்டும். இதை வலியுறுத்தவே இந்த யாத்திரை. மக்கள் தங்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கான மிகப் பெரிய மேடையாக இந்த யாத்திரை திகழும்.
துரதிருஷ்டவசமாக மத்தியிலும், அசாமிலும் உள்ள அரசுகள் ஜனநாயகத்தின் மதிப்பீடுகளை அறியவில்லை. ஜனநாயக நடைமுறை மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அரசியல் கட்சிகளைக் கொண்ட இந்த அமைப்பு மீதும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மணிப்பூரில் இருந்து தொடங்க வேண்டும் என்று நாங்கள் முடிவு எடுத்ததற்குக் காரணம் இருக்கிறது. வன்முறை காரணமாக மணிப்பூர் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். மணிப்பூரின் காயத்துக்கு மருந்து போட நினைக்கிறோம். மணிப்பூர் விவகாரத்தை நாங்கள் ஒருபோதும் அரியலாக்கவில்லை. ஆனால், மணிப்பூர் மக்களோடு நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை நாட்டுக்கு சொல்லவே யாத்திரையை இங்கிருந்து தொடங்குகிறோம்.
இந்திய ஒற்றுமை நியாய யாத்திரைக்கு அனுமதி கோரி ஒரு வாரத்துக்கு முன்பே மணிப்பூர் தலைமைச் செயலருக்கு மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விண்ணப்பம் கொடுத்துவிட்டார். ஆனால், அனுமதியை தங்களால் வழங்க முடியாது என அவர் தற்போது சொல்கிறார். அனுமதி கோரி அளிக்கப்பட்ட கடிதம், டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து ஒப்புதல் வந்த பிறகே ஒப்புதல் தர முடியும் என்றும் மணிப்பூர் தலைமைச் செயலர் கூறுகிறார். இது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. ஒரு மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி கூட்டம் நடத்த விரும்பினால் அதற்கு டெல்லி அனுமதி வழங்க வேண்டுமா?. இவ்வாறு அவர் கூறினார்.