நாட்டின் 18-வது லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுடன் நாளையும் நாளை மறுநாளும் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
தற்போதைய 17-வது லோக்சபாவின் பதவி காலம் ஜூன் 16-ந் தேதியுடன் நிறைவடைகிறது. 2019-ம் ஆண்டு 17-வது லோக்சபா தேர்தல் ஏப்ரல்- மே மாதங்களில் நடத்தப்பட்டது. 18-வது லோக்சபா தேர்தலையும் வரும் ஏப்ரல் மே மாதங்களில் பல்வேறு கட்டங்களாக நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
லோக்சபாவில் மொத்தம் 543 இடங்கள். பெரும்பான்மைக்கு தேவை 272. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களில் வென்று 2-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்தது. பாஜக மட்டும் 303 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு 19.49% வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மொத்தம் 91 இடங்கள் கிடைத்தன.
தற்போதைய தேர்தலைப் பொறுத்தவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றுவதில் முனைப்பாக உள்ளது. அதே நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிறிய கட்சிகள்தான் அதிகமாக உள்ளன. இன்னொரு பக்கம் பாஜகவை வீழ்த்துவதற்காக மொத்தம் 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. இதில் காங்கிரஸ், திமுக ,திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிகள் , ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் களமிறங்கி உள்ளன.
இந்நிலையில் லோக்சபா தேர்தலை எப்போது எத்தனை கட்டங்களாக நடத்துவது? என்பது தொடர்பான விரிவான ஆலோசனைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக நாட்டின் அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களையும் டெல்லிக்கு வரவழைத்துள்ளது தேர்தல் ஆணையம். டெல்லியில் நாளையும் நாளை மறுநாளும் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்துகிறது தேர்தல் ஆணையம்.