மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ தொடக்க நிகழ்வை நடத்த மணிப்பூர் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ என்கிற பெயரில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார். முன்னதாக, பாரத் ஜோடோ யாத்திரையின்போது 4,500 கி.மீ பயணம் செய்த ராகுல் காந்தி, தற்போது இந்த யாத்திரையில் 6,200 கிமீ தூரம் பயணிக்க உள்ளார். மணிப்பூர், நாகலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ராகுல் காந்தி பயணம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வரும் 2024 மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தியின் பாரத ஜோடோ நியாய யாத்திரை பெறும் கவனம் பெற்றுள்ளது. வரும் ஜனவரி 14ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கி மார்ச் 20 வரை இந்த யாத்திரை நடைபெறும் என அண்மையில் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரையை மணிப்பூரில் தொடங்க அம்மாநில பாஜக அரசு அனுமதி மறுத்ததாக தகவல் வெளியானது. மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் ஹட்டா கங்ஜெய்புங் மைதானத்தில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை தொடங்க அனுமதி கோரி அம்மாநில காங்கிரஸ் கட்சி ஜனவரி 2ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்தது. மணிப்பூர் அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்காததால், மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மேகச்சந்திர சிங் தலைமையிலான குழுவினர் இன்று முதல்வர் பிரேன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். எனினும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம்காட்டி அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. குக்கி மைத்தேயி இன மக்கள் இடையேயான மோதல், வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை, அவ்வப்போது வன்முறைகள் நடக்கின்றன என்பதைக் காரணம் காட்டி, காங்கிரஸ் கட்சியின் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், மணிப்பூரில் ராகுல் காந்தி யாத்திரை தொடக்க நிகழ்வுக்கு மணிப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. பாரத் நியாய் யாத்ரா தொடக்க நிகழ்வுக்கு மணிப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. குறைந்த அளவிலான தொண்டர்களுடன் நிகழ்வை நடத்த மணிப்பூர் அரசு அனுமதித்துள்ளது. இதையடுத்து, இம்பால் நகரின் ஹப்தா கஞ்ச்ஜெய்பங்க் பகுதியில் இருந்து ராகுல் நடைபயணம் தொடங்குகிறது.