உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு நூறு கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். ஆனால் அரசு ஊழியர்களுக்கு கொடுக்க பணம் இருக்காது என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்புடன் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். எனினும் வருமான வரி செலுத்துபவர்கள், அரசு பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், சர்க்கரை அட்டைகாரர்கள் மற்றும் பொருள் இல்லா அட்டை வைத்திருப்போருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் நிபந்தனையின்றி அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது பொங்கல் பண்டிகைக்கான டோக்கன் வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வை சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் சீமான் கலந்துகொண்டு பொங்கல் வைத்து சூடம் காட்டி வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் பொங்கல் பரிசு தொடர்பாக கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
கடந்த முறை பொங்கல் பரிசாக 21 பொருட்களை கொடுத்த போது அதில் வெல்லம் உருகிப் போயிருந்தது. இதனால் பொங்கல் பரிசை சுருக்கி 3 பொருட்களாக மாற்றிவிட்டார்கள். தமிழர்கள் காலை முதல் மாலை வரை உழைக்கிறார்கள். தமிழர்களுக்கு என்று பொங்கல் என்ற ஒரே பண்டிகைதான் இருக்கிறது. அதற்குக் கூட அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி சேலை வாங்க முடியாத வறுமை நிலையில் தான் இருக்கிறார்கள் என்றால் இதற்கெல்லாம் யார் காரணம்?” என்று தமிழக அரசை விமர்சனம் செய்தார்.
நாள் முழுவதும் உழைக்கும் தமிழன் பொங்கல் பரிசுக்காக கையேந்துகிறான் சரி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த உழைப்பில் சம்பாதித்து எங்களுக்கு பொங்கல் பரிசை தருகிறார் என்ற சீமான், “என் காசை எடுத்து எனக்கே கொடுக்கிறேன் என்று சொல்ல உங்களால் எப்படி முடிகிறது. பொங்கல் பரிசு வழங்குவது யார் காசுல.. மக்களைக் காட்டிதானே கடன் வாங்குகிறீர்கள்” என்றும் காட்டமாக கூறினார்.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடி, வழக்கம் போல தமிழ் மொழியையும், தமிழ் கவிஞர்களையும் பாராட்டி பேசினார். இந்நிலையில், இதனை மேற்கொள்காட்டி பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழ் பாசமும், தமிழ் உணர்வும் இருக்கும் எல்லோருமே தமிழர்கள் தான். அப்படி பார்த்தால், மோடியும் தமிழர் தான்” எனக் கூறினார்.
இந்நிலையில், அண்ணாமலை இவ்வாறு கூறியது பற்றி சீமானிடம் நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அந்த கேள்வியை கேட்டதும் அப்படியே சில வினாடிகள் அந்த நிருபரை ஏற இறங்க பார்த்த சீமான், முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் சிறிது நேரம் இருந்துவிட்டு, “ஏதோ கேக்குறீங்க.. நான் வேற ஏதாவது சொல்லிற போறேன் தம்பி” எனக் கூற அவருடன் இருந்தவர்கள் வெடித்து சிரித்தனர்.
அதன் பின்னர் சீமான் கூறுகையில், “இப்ப ஜி.யு. போப், அதான் தம்பி, நம்ம வீரமாமுனிவர். அவரை பற்றி உங்களுக்கு தெரியும்ல. அவரு நம்ம மோடியை விட தமிழ் பற்றாளர் தானே. திருக்குறள், திருவாசகத்தை எல்லாம் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். இன்னும் பல தொண்டுகளை தமிழுக்கு செய்திருக்கிறார். இப்போ அவரை தமிழர்னு சொல்லணுமா.. இல்லைனா ஆங்கிலேயர்னு சொல்லணுமா? மோடியை தமிழர்னு நான் ஏத்துக்குறேன். வாங்க.. தமிழ்நாட்டுல முதலமைச்சர் வேட்பாளராக நின்னு ஜெயிச்சு ஆளுங்க. செய்றீங்களா?
தமிழ் உணர்வுடன் இருக்காரு.. அதனால மோடியும் தமிழர்தான் என்றால், தமிழ் வாழ்வதற்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்ற கேள்வி வருமா இல்லையா? தமிழர்களுக்காக நீங்க (மோடி) என்ன செஞ்சிருக்கீங்க? மத்திய தமிழராய்ச்சி நிறுவனத்துக்கு நீங்க ஒதுககுன காசு எவ்வளவு.. சமஸ்கிருதத்துக்கு ஒதுக்குன காசு எவ்வளவு? போய் கேப்போமோ? உலகம் பூரா போய் பேசுனீங்களே.. உலகின் மூத்த மொழி தமிழ் மொழினு.. இன்னைக்கு நீங்க திறந்த வைத்த நாடாளுமன்றத்துல முகப்பு கல்வெட்டுல இந்தியும், சமஸ்கிருதமும் தானே இருக்கு. ஏன் தமிழ் மொழியை நீங்க பொறிக்கல? சமஸ்கிருதத்துல ஏன் இருக்கணும்? எந்த மாநிலத்துல சமஸ்கிருதம் பேசுறாங்க?
அப்போ நீ என்னை ஏமாத்துற.. இந்த கோழிக்கு இரை போடுவான் பாத்திருக்கியா.. பேக் பேக் பேக் பேக்னு அது மொழியிலேயே பேசி போடுவான். கோழியும் அட நம்ம மொழில பேசுறானய்யானு மனசுல நினைக்கும். அடுத்த நொடி அது சட்டில கொதிக்கும். அந்த நிலைமை வந்துர கூடாதுனு தான நாங்க இங்க கத்திட்டு இருக்கோம். இப்படி பல பேர் பேசி பேசி எங்களை ஏமாத்திட்டாங்க தம்பி. இனியும் நாங்க ஏமாற மாட்டோம்.
நாங்கள் அதிகாரத்துக்கு வரும்போது பொங்கல் பண்டிகையை ஒரு வாரத்துக்கு பெரிய விழாவாக கொண்டாடுவோம். அரசு, போக்குவரத்து தொழிலாளர்களிடம் கடன் வாங்கிய கடனாளி. பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையம் கட்டுகிறீர்கள். ஆனால் அரசு பஸ் ஒழுங்காக உள்ளதா? மழையில் பஸ்கள் ஒழுகுகிறது. இலவச பஸ் பாஸ் எதற்கு?, போக்குவரத்து துறையில் ஒரு லட்சம் கோடி இழப்பு அ.தி.மு.க. ஆட்சியில்தான் வந்ததா? ஏன் அதற்கு முன்பு இல்லையா?. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு நூறு கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். ஆனால் அரசு ஊழியர்களுக்கு கொடுக்க பணம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.