அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் “சமூகநீதி” பாடல் பாடப்படும்: அன்பில் மகேஷ்!

அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் சமூகநீதி பாடல் பாடப்படும். இது தொடர்பான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இறைவணக்கம் நிகழ்ச்சி முடிந்ததும் சமூக நீதி பாடல் ஒலிபரப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் “சமூகநீதி” பாடல் பாடப்படும் என்று அமைச்சர் அன்பில்மகேஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது:-

அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் “விழுதுகள்” நிகழ்வைத் தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட “சமூகநீதி” உள்ளிட்ட 10 பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “இந்த 10 பாடல்கள் தொகுப்பில் சமூகநீதியை வலியுறுத்தும் பாடலை அசெம்பிளி நேரத்தில் பாடிவிட்டு வகுப்புக்குச் செல்ல வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

சமூகநீதிக் கொள்கையை எப்போதும் அழுத்தமாக வலியுறுத்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கிணங்க இனிவரும் காலங்களில் “சமூகநீதி” பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் என அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.