அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவதே இலக்கு: பிரதமர் மோடி!

“அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதே மத்திய அரசின் இலக்கு” என்று ‘துடிப்பான குஜராத்’ சர்வதேச உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

துடிப்பான குஜராத் சர்வதேச உச்சி மாநாடு 2024, காந்திநகரில் இன்று தொடங்கி உள்ளது. இந்த இரண்டு நாள் மாநாட்டை தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நாடு தனது 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது அது வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. இதைக் கருத்தில் கொண்டே அடுத்த 25 ஆண்டுகளை அமிர்த காலம் என நாம் குறிப்பிடுகிறோம். இந்த அமிர்த காலத்தில் நடைபெறும் முதல் துடிப்புமிகு குஜராத் சர்வதேச உச்சி மாநாடு இது. இந்த மாநாட்டில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மிக முக்கிய பங்குதாரர்கள்.

சர்வதேச சூழல் இன்று எப்படி இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருந்தும், இந்திய பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது என்றால், இவ்வளவு வளர்ச்சி வேகத்தைக் காட்டுகிறது என்றால் அதற்குப் பின்னால், கடந்த 10 ஆண்டுகளில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களில் நாம் செலுத்திய கவனம் மிக முக்கிய காரணம். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் திறன் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்தி உள்ளன. இன்று இந்தியா உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதாரம். 10 ஆண்டுகளுக்கு முன்பு அது 11-வது இடத்தில் இருந்தது. வரக்கூடிய ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல் 3 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று பல்வேறு மிகப் பெரிய சர்வதேச அமைப்புகள் கணித்துள்ளன. வல்லுநர்கள் தங்கள் அவதானிப்புகளை மேற்கொள்ளட்டும். ஆனால், இது நிகழும். இது எனது வாக்குறுதி. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

துடிப்பான குஜராத் சர்வதேச உச்சிமாநாடு கடந்த 2003-ம் ஆண்டு அப்போது அம்மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. தற்போது அதன் பத்தாவது உச்சி மாநாடு காந்திநகரில் நடைபெற்று வருகிறது. எதிர்காலத்துக்கான வாசல் என்ற கருப்பொருளில் இந்த உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.