கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள் யாத்திரை’ மேற்கொண்டார். ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் மக்களிடையே அவர் பேசியதாவது:-
ஏழை மக்களின் எண்ணத்துக்காக ஓர் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தான் ‘என் மண், என் மக்கள் யாத்திரை’ மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் கடந்த 31 மாதம் திமுக ஆட்சியில் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. 9 ஆண்டு கால மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் மூலம் மக்களிடையே அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
திமுக அரசு இந்தி திணிப்பு என அரசியல் செய்து வருகிறது. ஆனால் மோடி இந்தியா முழுவதும் தமிழ் படிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். தமிழகத்துக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும், தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து தமிழை உலக அளவில் கொண்டு செல்கிறார். பிரதமர் மோடி தாய்மார்களின் இல்லத்திலும், உள்ளத்திலும் இருக்கிறார். தற்போதைய நிலவரத்தை பார்த்தால் காங்கிரஸ் கட்சியினரே மோடிக்கு தான் வாக்களிக்க போகிறார்கள் என தெரிகிறது.
பொய் பேசும் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். அவர் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றி உள்ளதாக கூறி வருகிறார். ஆனால், 20 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழ கூழ் தொழிறசாலை, பதநீர் மூலம் பனைவெல்லம் தயாரிப்பை ஊக்கப்படுத்தி, வேளாண் கூட்டுறவு சங்க நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்தல் உட்பட இந்த மாவட்ட மக்களுக்கு அளித்த பல்வேறு வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தமிழகத்தில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 5-ல் ஒருவர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர். மது குடிப்பதை தடுக்க முடியாது. தமிழகத்தில் கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் 3 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் படிபடியாக குறைக்கப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும். டாஸ்மாக் மூலம் அரசுக்கு ரூ.44 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், பனை, தென்னையில் 168 மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து, ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என பாஜக சார்பில் அறிக்கையை முதல்வர், ஆளுநரிடம் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
டாஸ்மாக் நடத்துவது அரசுக்கு வருவாய் கிடைப்பதற்காக இல்லை. திமுகவினரின் நடத்தும் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காக தான். பொங்கல் தொகுப்பாக ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது திமுக காலாண்டரையும் கொடுத்து விளம்பரம் தேடி வருகின்றனர். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.