காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சாலை விபத்தில் உயிர் தப்பினார்!

மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி சென்ற கார் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்தி நல்வாய்ப்பாக காயங்களின்றி உயிர் தப்பினார்.

மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்காக கான்பால் சென்று கொண்டிருந்தார். முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த பயணத்தில் அவரது கார் அனந்த்நாக் மாவட்டத்தின் சங்கம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின்போது முப்தியின் காரில் அவருடன் அவரது பாதுகாவலரும் இருந்துள்ளார். இந்த விபத்தில் முப்திக்கு காயம் இல்லை என்றபோதிலும், அவரது பாதுகாப்பாளருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்து பகுதியில் இருந்து கிடைத்த படங்களில் மெகபூபா சென்ற காரின் பானட் நொறுங்கிப் போயிருப்பதைக் காணமுடிகிறது.

இதுகுறித்து முப்தியின் மகள் இல்திஜா முப்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மெகபூபா பயணம் செய்த கார் அனந்த்நாக் பகுதியில் இன்று பயங்கர விபத்துக்குள்ளானது. கடவுளின் கருணையால் அவரும் அவரது பாதுகாவலரும் பெரிய காயங்களின்றி உயிர் தப்பினர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த ஓமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிகவும் மோசமான சம்பவத்தில் இருந்து மெகபூபா முப்தி சாஹேப் காயங்களின்றி தப்பினார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து அரசு விசாரணை நடத்தும் என்று நம்புகிறேன். அவரது பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் ஏதாவது இந்த விபத்துக்கு காரணமாக இருந்திருக்கும் எனில், அவை களையப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.