மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்ட்டில் சீறிப்பாயும் காளைகள்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க அதனை மாடுபிடிவீரர்களும் பின்பற்றி வாசித்தனர்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஊர்களிலும் மிக பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதனை கால லட்சக்கணக்கானோர் மூன்று நாட்கள் மதுரையில் குவிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மதுரையில் குவிவார்கள். அந்தளவுக்கு இந்த மூன்று ஊர்களிலும் மிகவும் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். செய்தித் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படும். இதனிடையே இன்று அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பக்காவாக செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் காயம் அடைவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கே அருகேயே 30 மருத்துவர்கள் 50 செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் முகாம் அமைத்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் கால்நடை மருத்துவக் குழுவும் அங்கு முகாமிட்டுள்ளது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இன்று 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படும் எனத் தெரிகிறது.. இவற்றை அடக்குவதற்காக 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை முறைப்படி பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் 2 பசுமாடுகள் பரிசளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டை பொறுத்தவரை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஆனால் இந்தாண்டு அமைச்சர் மூர்த்தி மட்டும் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.