தி.மு.க. அரசின் ஊழலை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறோம். அந்த அடிப்படையில் தற்போது 2ஜி ஊழல் தொடர்பாக புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளோம் என்று அண்ணாமலை கூறினார்.
துக்ளக் பத்திரிகையின் 54-வது ஆண்டு நிறைவு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது. துக்ளக் பத்திரிகை ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்கும் முன்பு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை. 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற போதும், அதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு மீண்டும் ஆட்சி பொறுப்பற்ற போதும் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறிய பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தலின் போது கூறிய அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகின்ற ஒரே கட்சி பா.ஜனதா.
மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறுவது தவறானது. இந்த நிதி பகிர்வு எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பதை கூட தி.மு.க ஆட்சியாளர்கள் முழுமையாக புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள். நிதி கமிஷன் பரிந்துரைப்படியே மாநிலங்களுக்கு நிதி பகிர்வு வழங்கப்படுகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
குறுகிய மனப்பக்குவத்தோடு தி.மு.க. அரசியல் செய்து வருகிறது. செயற்கை தொழில்நுட்பம் குறித்து தமிழக மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு இது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு பெருமைப்பட்டு கொள்கிறது. செயற்கை தொழில்நுட்பம் குறித்த பாடத்திட்டத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் கொண்டு வந்து விட்டது. இது கூட தெரியாமல் தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து வருகிறது.
வருகிற நாடாளுமன்ற தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் தமிழகத்தின் அரசியலை வேறு பக்கம் திருப்பும் தேர்தல். தி.மு.க. அரசின் ஊழலை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறோம். அந்த அடிப்படையில் தற்போது 2ஜி ஊழல் தொடர்பாக புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளோம். தமிழக அரசியலை சுத்தப்படுத்தும் வரை பா.ஜனதா ஓயாது. இவ்வாறு அவர் பேசினார்.