விபத்தில்லா தமிழ்நாடு இலக்கை அடைய பொறுப்புடன் செயல்படுவோம்: மு.க.ஸ்டாலின்!

விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை, ‘தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்’ அனுசரிக்கப்படுகிறது. ‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை அடையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2023-2024ம் ஆண்டிற்கு, சாலைப் பாதுகாப்பிற்காக அரசு ரூ. 135 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நம்மைக் காக்கும் 48 என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதோடு, பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்றவகையில், சாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலைப்பாதுகாப்பு மாதத்தில், ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு நடைமேம்பாலங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகள் ஆகியவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளது. சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம். விதிகளை மதிப்போம் – வேதனைகளைத் தவிர்ப்போம் – சாலைப் பாதுகாப்பு நம் உயிர் பாதுகாப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.