ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.1,000 என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

“தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக திமுக அரசு செயல்படுத்த வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” எனும் கூற்றுக்கு ஏற்ப உலகை வழிநடத்தும் உழவுத் தொழில் செய்யும் உழவர் பெருமக்களுக்கும், அந்த உழவுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கும் இந்த உழவர் திருநாளில் எனது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆன இந்த திமுக அரசு தமிழகத்தின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.