“ராமர் கோவில் கட்டியுள்ள இடத்தில் பாபர் மசூதி இருந்ததாக நான் படித்துள்ளேன். அதை இடித்து ஒரு பிரிவினரை வருத்தத்திற்குள் தள்ளி ராமர் கோயில் கட்டியதில் எனக்கு உடன்பாடில்லை” என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ., முன்னிலையில் தங்களை தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேல்முருகன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகம், ‘தமிழ் மக்களுக்கே, தமிழக இளைஞர்களுக்கே’ என்ற கொள்கைக்காகவும், ஓசூர் சிப்காட்டில் உள்ளூர் மக்களுக்கும், அரசு திட்டங்களுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். தமிழகத்தில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகளில், 90 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு பணி வழங்க வேண்டுமென தொடர்ந்த கோரி வருவதால் எங்கள் கட்சியில் பலர் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் லஞ்ச லாவண்யம், போதை இல்லாத மாற்று அரசியலை எதிர்பார்த்து எங்களிடம் இணைகின்றனர்.
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி உட்பட, 60 கி.மீ., தொலைவுக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற தொடர்ந்து போராடி வருகிறோம். சென்னை, ஓஎம்ஆர்., சாலை உட்பட, மூன்று இடங்களில் சுங்கச்சாவடிகளை அகற்றிவுள்ளனர். தொடர்ந்து இது குறித்து சட்டப்பேரவையில் அழுத்தம் கொடுக்கிறேன். மத்திய அரசுக்கு, இது குறித்து மாநில அரசு அழுத்தம் கொடுக்கும் வகையில் பேசி வருகிறேன். தமிழக சட்டப்பேரவையில் என் குரல் கேட்பதுபோல் மக்களவையிலும் எங்கள் குரல் கேட்கும் வகையில் வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் சீட் கேட்கிறோம்.
ராமர் கோயில் விவகாரத்தில், நாங்கள் வெகு தொலைவில் இருக்கிறோம். இங்குள்ள மாரியம்மன், காளியம்மனையை எங்களால் கும்பிட முடியவில்லை. இந்தியாவில், 562 சமஸ்தானங்கள் இணைந்து ஒரு நாடாக உள்ளது. இங்கு மதத்தாலும், ஜாதியாலும் பிரிவினை ஏற்படுத்துவது தவறு. ராமர் கோவில் கட்டியுள்ள இடத்தில் பாபர் மசூதி இருந்ததாக நான் படித்துள்ளேன். அதை இடித்து ஒரு பிரிவினரை வருத்தத்திற்குள் தள்ளி ராமர் கோயில் கட்டியதில் எனக்கு உடன்பாடில்லை. இவ்வாறு அவர் பேசினார்.