எனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது: அண்ணாமலை!

எங்கள் ஊரில் வழக்காடும் மொழியை தான் நான் என்னுடைய பேச்சில் பயன்படுத்துகிறேன். அதனை பார்க்கிறவர்களின் கண்ணில்தான் வன்மம் இருக்கிறது. நாளையும் இதே போன்று பேசுவேன். எனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது பிரதமர் மோடியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது அண்ணாமலையுடன் பாஜக நிர்வாகிகளும் சந்தித்து பேசினர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறியதாவது:-

பிரதமர் மோடி சோலாப்பூரில் ஒரு நிகழ்வை முடித்து விட்டு, அதன்பிறகு பெங்களூரில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அதன்பிறகு சென்னையில் கேலோ இந்தியா துவக்க விழாவிற்கு வருகை தந்துள்ளார். சோலாப்பூர் நிகழ்ச்சியில் பிரதமர் கண்கலங்கியதை இந்தியாவே பார்த்தது. குறிப்பாக பிரதமர் மோடி பேசும் போது இதுபோன்ற வீட்டில் நானும் இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சின்ன வயதில் இருந்தது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பிரதமர் மோடி கண்கலங்கினார். அதன்பிறகு தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது.. கேலோ இந்தியா போட்டிகள் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்தியிருக்கிறார். அதே நேரத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி விடா முயற்சி குறித்து பிரதமர் பேசினார்.

பிரதமர் சனிக்கிழமை ஸ்ரீரங்கம் செல்கிறார். ஸ்ரீரங்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பிரதமர் மோடி அதன்பிறகு ராமேஸ்வரம் செல்கிறார். நாளை மறுநாள் தனுஷ்கோடி செல்கிறார். இரண்டு நாட்கள் முழுமையாக இறை பணியில் பிரதமர் மோடி விரதத்தில் தமிழகத்தில் உள்ள ஆன்மீக தலத்திற்கு செல்கிறார். ராமர் சென்ற இடத்துக்கெல்லாம் மோடி சென்றுவிட்டு, அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்கிறார். மோடி இந்த மாதத்தில் 2-வது முறையாக வந்துள்ளார். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

ஊடக சங்கங்கள் எனக்கு எதிராக அறிக்கை கண்டன அறிக்கை கொடுத்து இருக்கின்றன. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கொங்கு பகுதியில் இருக்கும் வழக்காடு மொழியில் பேசினால் அதை குற்றம் சாட்டுகிறார்கள். இவர்களுக்கு பிரச்சினை அண்ணாமலையின் பேச்சு இல்லை. அண்ணாமலை மீதுதான் பிரச்சினை. நான் என்ன பேசுகிறேன் என்பதை உணர்ந்துதான் நான் பேசுகிறேன். நாளையும் இந்த வழக்காடு மொழியை நான் பயன்படுத்த தான் போகிறேன். எந்த வார்த்தை சொன்னாலும் வன்மத்தை கற்பித்து வன்மத்தை பார்க்க ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது. இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது.

என்னுடைய பாத யாத்திரையில் தேசிய தலைவர் இந்த மாதம் கடைசியில் கலந்து கொள்கிறார். யாத்திரையின் இறுதி நிகழ்வில் பிரதமர் மோடியையும் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளோம். அதற்கான தேதியையும் நாங்கள் கேட்டு இருக்கிறோம். சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களுக்கு தொந்தரவு இல்லாமல் யாத்திரையை நடத்த உள்ளோம். இளநீர் குடித்து மட்டுமே பிரதமர் மோடி பயணங்களை மேற்கொண்டு வருவதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன். பிரதமர் மோடி இறை பணியில் உள்ளார். அதனால் நாங்கள் பிரதமரிடம் கட்சி தொடர்பாக தொந்தரவு செய்யவில்லை. நேரமும் கேட்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை கட்சியை தயார்ப்படுத்தி வருகிறோம். பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். நாங்கள் தயாராக இருக்கிறோம். பாஜகவின் வளர்ச்சிக்கான களமாக தமிழ்நாடு உள்ளது. பிரதமரே எவ்வளவு கவனம் கொடுக்கிறார் என்று பாருங்கள். இரண்டாவது முறையாக இந்த மாதத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். மீண்டும் அடுத்த மாதம் வருவதற்கான வாய்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.