ஜெயலலிதாவுக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதை விட கோடநாட்டுக்கு வருவதுதான் பிடிக்கும்: சசிகலா!

கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டிய சசிகலா, ஜெயலலிதாவுக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதை விட கோடநாட்டுக்கு வருவதுதான் மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் தேயிலை தோட்டம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அவரும் சசிகலாவும் கோடநாடு பங்களாவிற்கு அவ்வப்போது வந்து தங்கிச் செல்வது வழக்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா இங்கு வருகை தரவில்லை. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாட்டிற்கு நேற்று முன்தினம் வந்தார் சசிகலா.

இந்நிலையில், நேற்று கோடநாடு எஸ்டேட் பகுதியில் உள்ள கோடநாடு காட்சிமுனைக்கு செல்லக்கூடிய பிரதான சாலை அருகே 10ஆம் எண் நுழைவு வாயில் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிலை நிறுவுவதற்கும், மணிமண்டபம் அமைப்பதற்கும் பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில், சசிகலா அவரது குடும்ப உறுப்பினர்கள், கோடநாடு எஸ்டேட் மேலாளர் ஆகியோர் பங்கேற்றனர். ஜெயலலிதா மணிமண்டபம் அமைக்கும் பணிக்கு சசிகலா, அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது:-

ஜெயலலிதா இல்லாமல் நான் கோடநாடு வந்ததில்லை. அவர் இல்லாமல் எப்படி இங்கு வருவது என்ற தயக்கம் இருந்ததாலேயே இத்தனை நாளாக நான் இங்கு வரல்லை. ஜெயலலிதாவுக்கு இது மிகவும் பிடித்த இடம். எங்கள் இரண்டு பேரிடமும், இங்குள்ள தொழிலாளர்கள் பாசமாக பழகுவார்கள். நாங்கள் தொழிலாளர்கள் என நினைக்காமல், ஒரே குடும்பமாக இருந்தோம். தொழிலாளர்கள் என்று ஜெயலலிதா பாரபட்சமே பார்த்ததில்லை. இங்கு வரும்போதெல்லாம் தேயிலை எடுக்கும் போது அங்கு சென்று ஒவ்வொரு தொழிலாளிகளையும் தனித்தனியாாக சந்தித்து பேசி, சகஜமாக இந்த இடத்தில் ஜெயலலிதா வாழ்ந்தார். சாதாரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண் எப்படி இருப்பாரோ அதேபோலத்தான் அவர் இங்கு இருந்தார்.

எனது சிறுவயது காலத்தை நினைவுபடுத்தும் இடம் இந்த கோடநாடு தான் என ஜெயலலிதா சொல்வார். ஏன் வெளிநாடுகளுக்குச் செல்வதில்லை என்று எல்லோரும் கேட்பார்கள். வெளிநாடுகளை காட்டிலும், கோடநாடு செல்வதில் தான் எனக்கு விருப்பம் அதிகம். நல்ல இயற்கையான சூழல் என்பதால் வெளிநாடுகளை விட இங்கு வருவதுதான் பிடிக்கும் என்று அவர் கூறுவார். அதனால், பெங்களூரில் இருந்து நான் திரும்பி வரும்போதே, அவருக்கு மிகவும் பிடித்த இந்த இடத்தில் ஜெயலலிதாவுக்காக நினைவிடம் அமைக்க முடிவு செய்தேன். அவர் காலமாகிவிட்ட நிலையில், நானும் வரவில்லை என தொழிலாளர்கள் நினைக்க கூடாது என்பதற்காக இங்கு வந்துள்ளேன். காலத்திற்கும் அழியாத நினைவிடமாக இருக்க, சாஸ்திரப்படி, வாஸ்துபடி இடம் தேர்வு செய்து பூமி பூஜை செய்யப்பட்டது. வீட்டுக்குள் இருந்தாலும், எங்கு சென்றாலும் அவரது நினைவு வருகிறது. கோடநாடு காட்சி முனை சுற்றுலா தலமாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்ல வேண்டும் என்பதற்காகவே, சாலையோரமாக இடத்தை தேர்வு செய்துள்ளோம். இங்கு அனைத்து மக்களும் வந்து பார்த்து செல்லும் அளவுக்கு மணி மண்டபம், சிலை அமைக்கப்படும். பணிகளை விரைந்து முடித்து, வரும் ஆகஸ்ட் மாதத்தில் சிலை திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.