தரக்குறைவான பேச்சு பற்றி அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை என திமுக எம்.பி கனிமொழிக்கு பதில் அளித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அருவருக்கத்தக்க வகையில் கொச்சையான வார்த்தைகளால் ஊடகத்தினர் குறித்து பேசியதை பலரும் சாடி வருகின்றனர். அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் கொங்கு வட்டார வழக்கில் தான் பேசியதாகவும், அதனால் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பேச்சைக் கண்டித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி தனது சமூக வலைதள பக்கத்தில், “அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு மாநிலத்தின் அமைச்சர் குறித்தும், மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்தும் தரம் தாழ்ந்த வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இவ்வாறு ஒருவர் பேசிவருவது அரசியலின் தரத்தையே தாழ்த்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கனிமொழி கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை. அண்ணாமலை தனது பதிவில் கூறியுள்ளதாவது:-
ஆண்டாண்டு காலமாக, தரம் தாழ்ந்த மொழியில் மட்டுமே பேசிப் பழகிய திமுகவினருக்கு, எங்கள் பகுதியின் வழக்கு மொழி தவறாகத் தெரிவதில் வியப்பில்லை. உங்கள் தந்தை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதற்கொண்டு திமுக தெருமுனைப் பேச்சாளர்கள் வரை பேசும் தரக்குறைவான பேச்சை விட எந்தக் காலத்திலும், யாரும், யாரையும் தரக்குறைவாகப் பேசிவிட முடியாது. அப்படி ஒரு கட்சியில் இருந்து கொண்டு, தரக்குறைவான பேச்சு பற்றி அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை. எந்தவிதத் தகுதியும் அற்றவர்களுக்கு, வெற்று விளம்பரம் மூலம் ஒரு பிம்பம் கட்டமைக்க முயல்பவர்களை, பொதுச் சமூகம் இப்படித்தான் எதிர்கொள்ளும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நலம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.