செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜன.29-ம் தேதி வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், இந்த வழக்கில் இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீதிமன்ற காவல் ஜன.22 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கு எதிராக அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்களை, தனக்கு வழங்க வேண்டும். இந்த ஆவணங்களில் அமலாக்கத் துறை திருத்தங்களைச் செய்துள்ளது. தன்னை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், அமலாக்கத் துறை இத்தகைய ஆவணங்களைத் தயாரித்து உள்ளது. இந்த வழக்கில், தனக்கு ஆவணங்களை வழங்காமல் முழுமையாக விசாரணையைத் தொடர்வது முறையற்றது என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை வரும் ஜன.22-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக ஜன.22-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்கக்கூடாது. விசாரணையை தள்ளிவைக்க வேண்டும். இந்த மனு மீது முடிவெடுக்கும் வரை குற்றச்சாட்டுக்கள் பதிவையும் தள்ளிவைக்க வேண்டும். நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆவணங்களை தங்களுக்கும் வழங்கக் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவையும் விசாரிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களுக்கும் பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜன.29-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.