பிரதமர் நரேந்திர மோடி அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரைப் பின்பற்றவில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா இன்று நண்பகல் 12.29.08-க்கு நடைபெற்றது. அயோத்தியில் பால ராமரின் கண்களில் மூடப்பட்டிருந்த மஞ்சள் நிற துணி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அகற்றப்பட்டது. ராமர் சிலை பிராண பிரதிஷ்டை பூஜைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று செய்தார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அமர்ந்திருந்தார். இந்த நிகழ்வின் போது அயோத்தி கோயில் மற்றும் அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் தூவப்பட்டது.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமரிசித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவில் பிரதமரின் பங்களிப்பு பூஜ்ஜியமாக இருக்கும் போது மோடி பிராண பிரதிஷ்டை பூஜையில் ஈடுபடுகிறார், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பகவான் ராமரைப் பின்பற்றவில்லை, குறிப்பாக அவரது மனைவியிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை, கடந்த 10 ஆண்டுகளில் ராம ராஜ்ஜியத்தின்படி அவர் பிரதமராக நடந்து கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.