பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் போது அறநிலையத்துறை இருக்காது: அண்ணாமலை

தமிழகத்தில் தேவையில்லாத ஒரு துறை என்றால் இந்து அறநிலையத்துறை தான். எனவே, 2026-ல் பா.ஜனதா தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் போது, இந்து அறநிலையத்துறை இருக்காது என்று அண்ணாமலை பேசினார்.

அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த நேரத்தில் தமிழக கோவில்கள் விழாக்கோலம் பூண்டது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மற்றும் திரளாள பக்தர்கள் கண்டு களித்தார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய மக்கள் அனைவரும் ஒரே தாய், ஒரே பிள்ளை, ஒரே ரத்தம் என்பதை அயோத்தியில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை நிகழ்வு எடுத்துரைத்திருக்கிறது. மக்களின் நம்பிக்கைக்கு எதிராக அடக்குமுறையை கையாளுகிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள், தி.மு.க.வுக்கு பாடம் புகட்டுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என்றால், அனுமதி வாங்கி வாருங்கள் என்கிறார்கள். குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டைக்கு அனுமதி வேண்டுமென்கிறார்கள். அனுமதி கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள். அதனை எழுத்துபூர்வமாக கேட்டால், வாய்மொழியாக தான் கூறுவோம் என்கிறார்கள். தமிழகத்தில் தேவையில்லாத ஒரு துறை என்றால் இந்து அறநிலையத்துறை தான். எனவே, 2026-ல் பா.ஜனதா தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் போது, இந்து அறநிலையத்துறை இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.