அனைவருக்கும் சொந்தமான கடவுள் ராமரை பாஜகவிடம் விட்டுத்தர முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்தார்.
நேற்று (ஜன.22) அயோத்தியில் நடைபெற்ற ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வையொட்டி, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் சசி தரூர் எக்ஸ் தளத்தில் ராமரின் படத்தைப் பகிர்ந்திருந்தார். அவரது செயல் கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில் அதற்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் சசி தரூர் கூறியதாவது:-
நான் உள்பட பலரும் எங்களின் பக்தியின் பொருட்டு ராமரை வழிபடுகிறோம். ராமபக்தர்கள் அனைவரையும் தனக்கு வாக்களிக்குமாறு பாஜக பிரசாரம் செய்துவருகிறது. ஆனால் ராமபக்தர்கள் அனைவருமே பாஜக ஆதரவாளர்கள் அல்ல. அனைவருக்கும் பொதுவான ராமரை பாஜகவிடம் விட்டுத்தர முடியாது.
மதச்சார்பின்மை என்பது மதங்களே இல்லாமல் இருப்பதல்ல. அவரவர் விருப்பத்திற்கேற்ப மதத்தைப் பின்பற்றும் பன்மைத்துவமே ஆகும். நான் கோயிலுக்குச் சென்றால் கடவுளை வழிபடுவது மட்டுமே நோக்கமாக கொண்டு செல்வேன். பாஜகவினரைப் போல அரசியல் நோக்கங்களுடன் செல்லமாட்டேன். ராமர் கோயில் கட்டுவதற்காக மசூதியை இடித்திருக்க தேவையில்லை என்றே நான் ஆரம்பத்தில் இருந்து கூறிவருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.