ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் கூறிய கருத்துக்கு, “மார்க்கெட் இல்லாத இயக்குனர்களின் கருத்திற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்தியம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன. அவர் பேசியதாவது:-
இன்று மிக முக்கியமான நாள். கற்பூரம் ஏற்றவில்லை என்றால் கூட தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுவிடுவோம். மிகவும் தீவிரமான ஒரு காலக்கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும், 5, 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் நாம் இருக்கப்போகிறோம் என்பது நமக்குத் தெரியாது. அந்த மாதிரி ஒரு காலக்கட்டத்தில் நாம் நுழைவதற்கு முன்பாக நம்மை நாமே பண்படுத்திக்கொள்ள வேண்டும். மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும், மதவாதத்தையும் அழிப்பதற்கு நம்மிடம் இருக்கும் கலையை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறோம். பிற்போக்குத்தனங்களை கலை அழிக்கும் என நம்புகிறோம். இந்தியாவை மோசமான காலக்கட்டத்தை நோக்கி தள்ளிவிடாமல் நிறுத்துவதற்கு நம்மால் முடிந்த வேலையை நாம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
இவரது கருத்து விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சிலர் அண்ணாமலையை பற்றி பேசினால் அல்லது பாஜகவை பற்றி பேசினால் பேமஸாகிவிடலாம் என்று சுற்றுகிறார்கள். அவர்களை பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை. மார்கெட் இல்லாத நடிகர்கள், மார்கெட் இல்லாத இயக்குநர்கள் பற்றி நாங்கள் பேசி ஏன் மார்கெட் வேல்யூவை ஏற்றிவிட வேண்டும்? அவர் தூங்கி எழுந்து வந்து சொல்லும் கருத்துக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது” என்று கூறியுள்ளார்.