காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 14-ம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் தவுபல் நகரில் இருந்து பாரத ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். யாத்திரையின் 10-வது நாளான நேற்று அசாமின் குவாஹாட்டி நகருக்கு அவர் பாத யாத்திரையாக சென்றார். சுமார் 5,000-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களும் அவருடன் சென்றனர். அப்போது குவாஹாட்டி நகருக்குள் ராகுல் காந்தி நுழைய அசாம் போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக போலீஸாருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை காங்கிரஸார் அகற்றினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “அசாம் மிகவும் அமைதியான மாநிலம். நக்சலைட் அணுகுமுறை எங்கள் கலாச்சாரத்துக்கு எதிரானது. ராகுல் காந்தி மக்களை தூண்டி விடுகிறார். வன்முறை தொடர்பான வீடியோவை காங்கிரஸாரே வெளியிட்டு உள்ளனர்.
இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து ராகுல் மீது வழக்கு பதிவு செய்ய அசாம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். காங்கிரஸாரின் வன்முறையால் குவாஹாட்டியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது” என்றார்.
ராகுல் காந்தி கூறும்போது, “குவாஹாட்டியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பஜ்ரங்தளம் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. எங்களது பாத யாத்திரைக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்? நாங்கள் சட்டத்தை மீறவில்லை. சாலை தடுப்புகளை மட்டுமே அகற்றினோம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், யாத்திரையின்போது வன்முறையை தூண்டியதாக ராகுல்காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபால், கட்சி தொண்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டுதல், பொதுச்சொத்திற்கு சேதம் ஏற்படுத்ததல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.