லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் “இந்தியா” கூட்டணி உடைந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.
2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்றது. ஆனால் கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என 4 முனைப் போட்டி ஏற்பட்டது. 2019 தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களில் வென்றது. பாஜக, 18 இடங்களைக் கைப்பற்றி மிரட்டல் வெற்றியைப் பெற்றது. 2014 தேர்தலில் பாஜக வெறும் 2 இடங்களைத்தான் வென்றிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 2 இடங்கள் கிடைத்தன. மேற்கு வங்கத்தை கோட்டையாக வைத்திருந்த இடதுசாரிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காத பரிதாப நிலைமைதான் ஏற்பட்டது. 2019 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 43.69% வாக்குகளையும் பாஜக 40.64% வாக்குகளையும் பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 5.67%, சிபிஎம்-க்கு 6.34% வாக்குகள் கிடைத்தன.
2021-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 215 இடங்களை வென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 48.02% வாக்குகளைப் பெற்றது. 2016-ம் ஆண்டு வெறும் 3 இடங்களில் வென்றிருந்த பாஜகவோ 77 இடங்களை கைப்பற்றியது. 2021 தேர்தலில் பாஜகவுக்கு மொத்தம் 37.97% வாக்குகள் கிடைத்தன. ஆனால் 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- சிபிஎம் (இடதுசாரிகள்) கூட்டணி அமைத்தும் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. சிபிஎம்-க்கு 4.73% வாக்குகளும் காங்கிரஸுக்கு 2.93% வாக்குகளும்தான் கிடைத்தன. இந்த பின்ணியில் மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை சட்டசபை தேர்தல் அல்லது லோக்சபா தேர்தலில் வெல்லும் குதிரைதான் திரிணாமுல் காங்கிரஸ். வெல்லக் கூடிய குதிரை மீது சவாரி செய்து வெற்றியை அறுவடை செய்யக் கூடிய வாய்ப்பாகாவே காங்கிரஸுக்கு “இந்தியா” கூட்டணி என்ற கேடயம் கிடைத்தது. “இந்தியா” கூட்டணி என்ற கேடயத்தின் கீழ் திரிணாமுல் காங்கிரஸ் கொடுக்கிற தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு ஜெயிக்கக் கூடிய அணுகுமுறையை காங்கிரஸ் கட்சி உருவாக்கி இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இன்னும் கிபி, கிமு ஒரு காலத்தில் நாங்கள் எல்லாம் என வசனம் பேசிக் கொண்டு அத்தனை தொகுதி வேண்டும்; இத்தனை தொகுதி வேண்டும் என கள நிலவரத்தை உள்வாங்காமலேயே கரடியாய் கத்தினால் பயனேதும் இல்லை என்பதைத்தான் மேற்கு வங்கத்தில் தனித்தே போட்டியிடுவோம் என்கிற மமதா பானர்ஜியின் பதிலடி சொல்லுகிறது.
மமதா பானர்ஜியின் இந்த அறிவிப்பு மூலம் திரிணாமுல் காங்கிரஸ், பாஜகவுக்குதான் ஆதாயம். காங்கிரஸுக்கோ ஒன்று அல்லது 2 இடத்தில் வெல்லக் கூடிய வாய்ப்பை தொலைத்ததுதான் மிச்சம். திரிணாமுல் காங்கிரஸ் அல்லது பாஜகவின் கணக்கில்தான் காங்கிரஸ் போட்டியிடும் அத்தனை தொகுதிகளும் சேரப் போகிறது என்பது யதார்த்தம்.
மம்தா பானர்ஜி கூறுகையில், “காங்கிரஸ் கட்சியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று நான் ஏற்கெனவே கூறி வந்தேன். மேற்கு வங்கத்தில் பாஜகவை நாங்கள் தோற்கடிப்போம். நாங்கள் காங்கிரஸுக்குக் கொடுத்த அனைத்து யோசனைகளையும் அவர்கள் நிராகரித்தார்கள். அதனைத் தொடர்ந்தே மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் முடிவை நாங்கள் எடுத்தோம். நாங்கள் இண்டியா கூட்டணியில் இருக்கும் நிலையிலும், ராகுல் காந்தியின் யாத்திரை மேற்கு வங்கம் வழியாக செல்வதை மரியாதைக்காக கூட எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அவர்களுக்கு எங்களுடன் எந்த உறவும் இல்லை” எனக் காத்திரமாகத் தெரிவித்திருந்தார்.