தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம்; அதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம்; அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ”வெல்லும் ஜனநாயகம்” மாநாடு திருச்சியில் தொடங்கியது. மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன் மொழிந்தார். மேலும், எஞ்சிய தீர்மானங்கள் பின்னர் முன்மொழியப்படும் என்றார். பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு, பெரும்பான்மைவாத அரசியலைப் புறக்கணிப்பு என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் திருச்சி சிறுகனூரில் நடைபெற்று வரும் விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

எனக்கு தோளோடு தோளாக நிற்பவர் திருமாவளவன். தமிழினத்துக்கு உரம் சேர்க்கும் வகையில் நாங்கள் கொள்கை உணர்வோடு இணைந்து நிற்கிறோம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம், மாநிலங்கள் என்ற நிலையே இருக்காது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்கள். இந்தியா கூட்டணியைக் கண்டு பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள பயத்தை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். சர்வாதிகார பாஜக அரசை தூக்கி எறிவோம்.

வெல்லும் ஜனநாயகம் என்று சொன்னால் போதாது; நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். ஜனநாயக அரசை நிறுவுவோம் என்ற சபதத்தை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நிறைவேற்றுவர். பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்பதே நமது இலக்கு. பாஜகவுக்கு எதிரான வாக்குகள் எந்த காரணம் கொண்டும் சிதறக் கூடாது. தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம்; அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. கேள்விகள் இல்லாத நாடாளுமன்றம், 147 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது நாட்டுக்கு அவமானம். ஒற்றுமையுடன் செயல்பட்டால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.