“2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. மொத்தமாக 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது சிறந்த விருதான பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியக் குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைஜயந்திமாலா உள்ளிட்ட ஐவருக்கும், பத்மபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட 17 பேருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கலை ஆசிரியர் பத்ரப்பன், விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, எழுத்தாளர் ஜோ டி குரூஸ், மருத்துவர் நாச்சியார் ஆகிய ஐவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. அவர்களுக்கும், பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 132 பேருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.