தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
சிதம்பரத்தில் நேற்று ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரை மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொண்டர்களிடையே பேசியதாவது:-
தமிழகத்தில் 157-வது தொகுதியில் யாத்திரை மேற்கொண்டிருக்கிறேன். தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சாதி, லஞ்சம், குடும்ப அரசியல், அடாவடி இல்லாத அரசியல் வேண்டுமென மக்கள் கருதுகின்றனர். இவை நான்கும் இல்லாத அரசியல், பிரதமர் நரேந்திர மோடியின் அரசியலாகும்.
தமிழகத்தில் லட்சக்கணக்கான கோயில்கள் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றை சரிவர பராமரிக்காமல், மாதத்துக்கு ஒருமுறை சிதம்பரத்துக்கு வந்துவிடுகின்றனர். பொது தீட்சிதர்கள்தான் கோயிலை நிர்வகிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பின்னரும், அறநிலையத் துறையினர் தொல்லை கொடுத்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சிதம்பரம் கோயிலில் பிரச்சினை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
அயோத்தி ராமர் கோயில் மூலம் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் உள்ள கோயில்களை சரியாகப் பராமரித்து, பக்தர்களுக்கு வசதிகளை செய்து தந்தால் ரூ.2 லட்சம் கோடி வரிவாய் கிடைக்கும். வரும் மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வென்று, மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார். கோயில் கட்டிவிட்டால், பாஜகவுக்கு வாக்களித்து விடுவார்களா என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினர் கேட்கின்றனர். நமது சரித்திரம், பாரம்பரியம், கலாசாரத்தை மீட்டுக் கொடுத்த ஒரே தலைவர் மோடிதான். எனவே, அவர் மீண்டும் பிரதமராவார்.
ஊழல், குடும்ப ஆட்சி, அடாவடித்தனம் இதுதான் திமுக ஆட்சி. இப்படி இருக்கையில் தமிழகம் எப்படி வளர்ச்சி பெறும்? வேங்கைவயல் பிரச்சினையில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. இதுகுறித்து திருமாவளவன் பேசவில்லை. பட்டியலினப் பெண்ணை திமுக அமைச்சரின் மகன், மருமகள் துன்புறுத்தியது குறித்து திருமாவளவன் வாயே திறக்கவில்லை. திமுகவினரைக் காட்டிலும், திருமாவளவன்தான் ஆட்சியை அதிகம் பாராட்டுகிறார். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.